“உனக்கு
பைத்தியமா பிடிச்சிருக்கு? இவ்ளோ நடந்ததுக்கு அப்பறமும் அவன் கல்யாணத்துக்கு
போகணும்னு சொல்ற”
அம்மா
கோபத்தில் ஏசினார். அவர் கோபத்திற்கு காரணம் என் கையில் இருக்கும் கலைவாணனின்
திருமண அழைப்பிதல். இத்தனைக்கும் அது எனக்கு வந்த அழைப்பிதலே அல்ல. என் தோழி யாழினியிடம்
இருந்து பெற்று வந்தது.
கலைவாணனும்
நானும் பல்கலைகழகத்தில் ஒன்றாக படித்தவர்கள். நட்பாக தொடங்கிய எங்களின் உறவு
காதலாய் மாறியது எப்போதென்று இருவருக்குமே தெரியாது. அழகான என் பல்கலைக்கழக
வாழ்வில் வானவில்லாய் வந்து வண்ணங்கள் சேர்த்தது அந்த காதல் தான்.
மழை
ஓய்ந்த பிறகு மறையும் வானவில்லாய் என் காதலும் இன்று கலைந்தே போனது. திருமண பேச்சி
தொடங்கியதில் இருந்து எங்களுக்குள் தொடர்ந்த வாக்குவாதங்கள் கடைசியில் எங்கள்
பிரிவுக்கு காரணமாகி விட்டது. ஆலமரமாய் வளர்ந்து நின்ற எங்கள் உறவு ஒரு நாள்
வெள்ளத்தில் சாய்ந்து போனது. ஒன்பது ஆண்டுகளாய் நீடித்த உறவை நொடி பொழுதில் தூக்கி
எரிந்து போனான்.
நானுன்
என் காதலை காப்பாற்ற சண்டையிட்டு பார்த்தேன், மண்டியிட்டும் கேட்டேன். அவன் மனம்
இறங்கவில்லை. அவன் எடுத்த முடிவுக்கு அவன் குடும்பமும் நண்பர்களும் கூட ஆதரவாய்
இருந்தனர். நான் என்னவோ வேண்டாதவள் போலவும் என்னை விட்டு விலகியிருப்பதே
நல்லதென்பதைப் போலவும் எத்தனையோ நாடகங்கள்
நடந்தன. கடைசி வரைக்கும் எங்களின் பிரிவிற்காக அழுததும் துடித்ததும் நான்
மட்டும்தான்.
எனக்கு
எல்லாமாகவும் இருந்த கலைவாணன் என் வாழ்வில் இல்லை என்பதை ஏற்க முடியாமல்
தவித்தேன். அழுது அழுது நாட்கள் கடந்தேன்.
வாழ்வதற்கான
அர்த்தம் தொலைத்தவள் போல் பைத்தியாமாகிக் கிடந்தேன். முட்டாள் தனமான முடிவுக்கும்
துணிந்தேன். விதி என் தந்தையின் உருவத்தில் வந்து என்னை காப்பாற்றியது.
மருத்துவமனையில்
கண்விழித்தபோது என் தாய் கதறியழுதுகொண்டிருந்தார். முதல் முறையாய் என் தந்தை கண்
கலங்கி நின்றதை அன்றுதான் பார்த்தேன். என் தோழி யாழினியும் மேலும் சில நண்பர்களும்
இருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் பதற்றமும் நான் பிழைத்துக்கொண்டேன் என்ற
மகிழ்ச்சியும் இருந்தது. இத்தனை உறவுகள் இருக்கும் போது என்னை உதறித்தள்ளிய
அவனுக்காக உயிரைவிடத் துணிந்த என்
முட்டாள்தனத்தை எண்ணி வெட்கப்பட்டேன்.
நான்
பிழைத்துக்கொண்டாலும் என்னால் இயல்பாக இருக்க முடியவே இல்லை. வெளி உலகத்தை
சந்திக்க முடியாமல் தனிமையில் மூழ்கிப்போனேன். அந்த நேரத்தில் எனக்கு பக்கபலமாய்
இருந்தது என் தந்தைதான். எதுவுமே நடக்காததுபோல் என்னோடு இயல்பாக பேசியது அவர்
மட்டும்தான்.
“ஊர்
உலகம் கடக்குதும்மா. நீ செம்மையா வாழனும்.”
என்
தந்தை அடிக்கடி சொல்லும் வார்த்தை இது. வாழனும் என்ற நம்பிக்கையை மீண்டும்
எனக்குள் விதைத்தது அவர் வார்த்தைகள் தான்.
நானும்
ஒரு வழியாக மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினேன். பழைய முகங்களை சந்திக்க
வேண்டாமென்று புதிய இடத்திற்கு வேலைமாறி போனேன். என் கவனத்தை வேறு திசை திருப்ப
முதுகலை பட்டம் படிக்க தொடங்கினேன். பழைய நினைவுகளை மறக்கவில்லை என்றாலும்
நினைப்பதற்கு நேரமின்றி ஓடிக்கொண்டிருந்தேன். என் பழைய காயத்தை மீண்டும்
புதுப்பிக்கும்படி வந்த செய்திதான் கலைவாணனின் கல்யாண செய்தி.
யாரோ ஒருத்தரின்
திருமண அழைப்பிதழில்
உன்
பேரையும் என் பேரையும்
எழுதிவைத்து
அழகுபார்த்தோம்..
இன்று
உன் திருமண அழைப்பிதழில்
யாரோ
ஒருத்தியின் பெயர் இருக்க
நீ அழகு
பார்க்கிறாய்
நான்
அழுது பார்க்கிறேன்
என்னை
பிரிந்த ஒரே வருடத்தில் அவன் திருமணத்திற்கு தயாரானது எல்லோருக்கும் வியப்பை
தந்தது. அம்மாவின் கோபத்திற்கும் அது தான் காரணம். அவன் திருமணத்திற்கு போகவே
கூடாதென்று மறுத்தார். நான் மீண்டும் பழைய நிலைமைக்கு போய்விடுவேனோ என்ற பயம்
அவருக்கு.
அவனை
மணக்கோலத்தில் பார்த்து மூலையில் நின்று அழுது புலம்புவதற்கு நான் இன்னும் அந்த
கோழைப்பெண் அல்ல. கடைசியாய் ஒரு முறை அவனை பார்க்க வேண்டும். இன்னமும் அவனை
நினைத்துக்கொண்டிருக்கும் என் மனம் அவனை மணக்கோலத்தில் பார்த்த பிறகாவது பழசை
எல்லாம் மறக்க நினைக்கும் அல்லவா. அதற்காகவேனும் நான் அவன் திருமணத்திற்கு போக
வேண்டும்.
எப்போதும்
போல இந்த முறையும் என் தந்தை எனக்கு ஆதரவாக பேசினார்.
“நீ
போய்ட்டு வாம்மா. நானே கூட்டிகிட்டு போறேன்.”
என்
தந்தையே என்னை அழைத்து செல்வதாய் சொன்னது நான் எதிர்பாராத ஒன்று தான். பெற்றவர்களை
நாம் காலம் காலமாய் காதலுக்கு எதிரியாகத்தான் பார்க்கிறோம். ஆனால் உண்மை சொன்னால்
காதலையும் கடந்து நிற்ப்பது பெற்றவர்களின் பாசம்தான்.
திருமணத்திற்கு
என்னோடு வரும்படி யாழினியை அழைத்தேன். நான் செய்வது பைத்தியக்காரத்தனம் என்று
திட்டினாலும் என்னோடு வர சம்மதித்தாள்.
திருமண
நாளும் வந்தது. நானும் யாழினியும் என் தந்தையோடு திருமணத்திற்கு சென்றோம். என்
தந்தை மண்டபத்திற்குள் வர விரும்பவில்லை. எங்களை போகச் சொல்லி வாகனத்திலேயே
காத்திருந்தார்.
மண்டபத்தின்
நுழைவாயில் வரை சென்ற எனக்கு மண்டபத்தினுள் செல்ல முடியவில்லை. மண்டபத்தின்
நுழைவாயிலில் மணமக்களின் பெயர்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவன் மனைவியின் பெயர்
இளவரசி. அரசியைப் போல் அழகாத்தான் இருந்தாள் அவன் இல்லத்தரசி. மண்டபமே கல்யாண கலைகட்டி கோலாகலமாக இருந்தது.
இந்த
ஓராண்டில் நான் கடந்துவந்த காயங்கள் என்னை பக்குவப்படுத்தி இருந்தது. அவனை
மணக்கோலத்தில் பார்க்கும் போது நான் கலங்கவில்லை. பழைய காயங்கள் எதுவும்
வலிக்கவில்லை. அவன் நலம்வாழ வேண்டுமென்று வாழ்த்திச்செல்லும் அளவுக்கு என் மனம்
பக்குவப்பட்டு இருந்தது.
“புறப்படலாமா?”
மண்டபத்தினுள்
நுழைந்த மறுகணமே புறப்படலாம் என்றதும் யாழினி சிரித்தாள். இதற்குதான் இவ்வளவு அடம்
பிடித்தாயா என்று கிண்டலாய் கேட்டு என்னோடு புறப்பட்டாள். நாங்கள் வருவதைப்
பார்த்து வாகனத்தில் அமர்ந்திருந்த என் தந்தையும் புன்னகைத்தார்.
“சரி.
அடுத்து என்ன?
அடுத்து
நான் என் வாழ்வில் என்ன செய்ய இருக்கிறேன் என்பதைத்தான் என் தந்தை கேட்கிறார். பிடிவாதமாய்
இருந்து நான் அவன் திருமணத்தையும் பார்த்து விட்டேன். இனி அடுத்து என்ன?
“செம்மையா
வாழனும்ப்பா.”
அவருக்கு
பிடித்த வசனத்தையே பதிலாக சொன்னேன். மூவரும் சிரித்தபடியே அங்கிருந்து
புறப்பட்டோம்.
No comments:
Post a Comment