“சீனியர், அதிசயமா இருக்கு?”
வல்லாவின் தொலைபேசி அழைப்பு எனக்கு அதிசயமாக தான் இருந்தது. இத்தனை ஆண்டுகளில்
இதுதான் அவனிடம் இருந்து எனக்கு வந்திருக்கும் முதல் தொலைப்பேசி அழைப்பு. அவனை
நான் சீனியர் என்றுதான் அழைப்பேன். ஆனால் மனசுக்குள் உரிமையோடு வல்லா என்றும் வாடா
போடா என்றும் அழைத்தே பழகிவிட்டது.
“மித்ரா, எனக்கு ஒரு உதவி வேண்டும். பேசலாமா?”
அவன் ஏதோ உதவி கேட்டுதான் அழைத்திருப்பான் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
என்ன உதவியென்று யூகிக்க முடிந்தும் என்னவென்று கேட்டேன்.
“கயல்விழியை பற்றி பேசணும். சந்திக்கலாமா?”
முதல் முறையாய் என்னை சந்திக்க வேண்டுமென்று அழைக்கிறான். அதுவும் அவன்
ராசாத்தியை பற்றி கேட்கத்தான். சந்திக்கலாம் என்றேன். எங்கே எப்போதென்று பிறகு
சொல்வதாய் சொல்லி விடைசொன்னான்.
பல்கலைகழகத்தில் கயல்விழி என்னைவிட ஓராண்டு மூத்த மாணவி. நான் இரண்டாம் ஆண்டு
படிக்கும் போது நானும் கயல்விழியும் ஒரே விடுதி அறையில்தான் தங்கி இருந்தோம். அந்த
காலகட்டத்தில் தான் நான் அவளோடு நெருங்கி பழக ஆரம்பித்தேன். அதே காலகட்டத்தில்
தான் வல்லா என்னோடு பேச தொடங்கினான்.
படிப்பு முடிந்த பிறகு நாங்கள் சந்திப்பதும் தொலைபேசியில் பேசுவதும் கூட
குறைவுதான். அவர்களின் பிரிவு கூட என் தோழிகள் சொல்லியே தெரிய வந்தது. அதைப்பற்றி
வல்லாவிடம் எப்படி கேட்பதென்று தெரியவில்லை. கயல்விழியை தொடர்புகொள்ளவும்
முடியவில்லை.
அந்நாளில் இருந்து இது நாள் வரைக்கும் வல்லாவின் கவிதைகள் அத்தனையும் அவன்
உள்ளத்தின் ரணங்களை சொல்லும் கவிதையாகவே இருந்தது. வெளியில் சிரிப்பதும்
உள்ளுக்குள் அழுவதுமாய் அவன் வாழும் கோமாளி வாழ்கையை அவன் கவிதைகள் காட்டி
கொடுத்தது. அவன் கவிதைகளை ரசிக்க முடிந்த என்னால் அந்த கவிதைக்குள் உள்ள ரணங்களை
ரசிக்க முடியவில்லை. நாளாக நாளாக அந்த ரணங்களை நானும் எனக்குள் உணரத் தொடங்கினேன்.
காயத்தை
கவிதையாக்கி வைத்தாய்.
கண்ணீரை
கவிதையாய் வடித்தாய்
வாழ்கையை
கவிதையில் சொன்னாய்
கவிதையே
வாழ்க்கையாய் வாழ்ந்தாய்
நீ எழுதிவச்ச கவிதையெல்லாம்
வாசிக்கும் யாருக்கும்
கவியெழுத தோணுமடா
எனக்கு மட்டும் ஏனோ
உன்ன காதலிக்க தோணுதடா
தாஜ்மஹலை காணும் எந்த ஒரு பொண்ணும் ஒரு நொடியாவது மும்தாஜாக மாறிப்போவாள்.
அவன் கவிதைக்குள் வாழத்தொடங்கிய நான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ராசாத்தியாகவே
மாறிப்போனேன்.
வல்லாவிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. இந்த வார இறுதியில் என் வீட்டுக்கு
அருகாமையில் இருக்கும் ஒரு தேநீர் விடுதியில் சந்திக்கலாம் என்றான். என்
வீட்டுக்கு பக்கம் என்பதெல்லாம் காரணம் அல்ல. அது அந்நாளில் அவர்கள் அடிக்கடி
சந்திக்கும் இடம்.
“திருந்தவே மாட்டானா? போயும் போயும் அங்கதான் சந்திக்கணுமா?” மனசுக்குள்
புலம்பிக்கொண்டே அவனுக்கு சரியென்று பதில் அனுப்பினேன்.
இப்படி மனசுக்குள்ளேயே சண்டைபோட்டு கதைபேசி காதலும் பேசி சில ஆண்டுகளை
கடந்துவிட்டேன். அவன் எழுதும் ஒவ்வொரு கவிதையும் இதயம் என்ற சதைக்கு அவன்
எழுப்பும் இரும்பு சுவர்கள். அதை உடைத்து அவன் மனசுக்குள் குடியேறுவது நிகழாத
காரியம் என்றாலும் நிகழாதா அந்த நாளென்று காத்திருக்கிறேன்.
ஊரில் உள்ள எல்லா தோஷமும் என் ஜாதகத்தில் இருப்பதால் என் கல்யாண பேச்சி
தானாகவே தள்ளிப்போய் கொண்டிருந்தது. நானும் எந்தக் கவலையுமின்றி கல்வியிலும்
தொழில்துறையிலும் என்னை மேம்படுத்திக்கொண்டு எனக்கான அடையாளத்தை செதுக்கிக்கொண்டு
அவனுக்கான ராசாத்தியாய் வாழும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
வார இறுதியும் வந்தது. அவனை சந்திக்க புறப்பட்டேன்.
எனக்கு முன்னரே அவன் தேநீர் விடுதியில் காத்திருந்தான். வணக்கம் சொல்லி நலம்
விசாரித்து வாழ்க்கை எப்படி போகுதுன்னு ஒப்புக்கு சில கேள்விகள் கேட்டான். அவன்
கேட்க துடிக்கும் கேள்வியே வேறு.
நானும் அவன் கேள்விகளிக்கு பதில் சொல்லி அவன் பேச வந்ததை நானே தொடக்கி
வைத்தேன்.
“கயல் பற்றி ஏதோ கேட்கனும்னு சொன்னிங்களே? என்ன சீனியர்?”
“நான் கயலை பார்க்கணும்.”
அவளைப் பற்றி பேச வேண்டும் என்றவன் இப்போது தேட வேண்டும் என்கிறான். ஏதோ பழைய
நினைவுகளோடும் ஓரிரு கவிதைகளோடும் முடிந்து போகும் என்று நினைத்த உரையாடல் இப்படி
ஒரு திருப்பத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இத்தனை காலமாய் அவன்
கவிதைகள் தானே அவளைத் தேடி ஓடிக்கொண்டு இருந்தது. இன்று இந்த கவிஞனே புறப்பட்ட
காரணம் என்ன?
“தயவு செய்து ஏன் எதுக்குன்னு கேட்காத மித்ரா. இந்த தேடலின் முடிவு ஏதுவா
இருக்கும்னு எனக்கே தெரியல. பார்க்கணும், அவ்வளவு தான்.”
நான் எதுவும் கேட்பதற்கு முன்னரே என் வாயடைத்தான். அன்று அவளைப் பற்றி பேசவும்
விரும்பாதவன் இன்று அவளைத் தேடுகிறான் என்றால் ஏதோ நடந்திருக்கிறது. அது
என்னவென்றும் அவன் சொல்ல விரும்பவில்லை. மொத்தத்தில் இந்த நாடகத்தில் பாத்திரமே
இல்லாத பார்வையாளர் நான். வீணே மேடையேறி காயப்பட்டு நிற்கிறேன்.
எங்கள் பல்கலைக்கழக தோழிகள் அத்தனை பேரிடமும் விசாரிக்க சொன்னான். யாராவது
ஒருத்தரிடமாவது அவள் தொடர்பில் இருப்பாள் என்று உறுதியாய் நம்பினான்.
விசாரிப்பதாய் நானும் உறுதி கொடுத்தேன்.
“மறக்கவே முடியல இல்ல சீனியர்?”
சில நேரங்களில் சில வார்த்தைகள் நம்மையும் மீறி வெளிப்பட்டு விடுகின்றன. என்
நிலையை அவனிடம் கேள்வியாய் கேட்டேன். கவிதையாய் பதிலொன்று சொன்னான்.
“மறப்பது ஒன்னும் பெரிய விஷயமல்ல. மறந்தால் நான் வாழ்ந்திருவேன். ஆனா காதல்
செத்திருமே.”
இத்தனை ஆழமாய் காதலிக்க முடியுமா? இத்தனை காதலை ஒரு பெண் மனசு தாங்குமா?
“காதலிச்சா உன்ன மாறி காதலிக்கனும்டா.” மனம் விட்டு சொல்ல வேண்டியதை
மனசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்.
எதிர்பார்த்தது போலவே எங்கள் சந்திப்பும் உரையாடலும் அரைமணி நேரம்கூட
நீடிக்கவில்லை. ஏதோ வேலை இருப்பதாகவும் புறப்பட வேண்டுமென்றும் சொன்னான். அது
பொய்யென்று தெரிந்தும் நானும் விடைசொன்னேன். நான் அழுது விடும் முன்னரே இந்த
உரையாடல் முடிவது நல்லதென்று நானும் புறப்பட்டேன்.
அந்த நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு. எதிர்பார்த்த அழைப்புதான்.
“மித்ரா, அவர் கிளம்பிட்டாரா?”
அழைத்தது கயல்விழி.
No comments:
Post a Comment