“ஆயா..”
மாரியாயி பாட்டிய ஆயா என்றழைத்தே பழக்கம்
எனக்கு. தோட்டப்புறங்களில் சிறார் காப்பகத்தை “ஆயா கொட்டாய்” என்றுதான் அழைப்போம். என் தந்தையின்
மறைவுக்குப் பிறகு என் தாய் வேலைக்கு போகவேண்டிய கட்டாயம். அதனால் நான் சிறுவயதில்
அதிக நேரம் செலவழித்தது இந்த ஆயா கொட்டாயில் தான். பத்து வருடத்திற்கு முன் இந்த
தோட்டத்தை விட்டுப் போன நான் இன்று என் திருமண அழைப்பிதழை கொடுக்க அவரைத் தேடி வந்துள்ளேன்.
“யாரு?” என்று குரல்
கொடுத்தவாறே வந்தார். மாரியாயி பாட்டிக்கு அறுவது வயதிருக்கும். இன்னமும்
துடிப்போடும் உற்சாகத்தோடும் தான் இருக்கிறார். முப்பது வருடங்களாய் மழலைகளோடு
காலத்தை கடந்தவர், வயசாகி விடுமா என்ன?
“நான் ராதா, முனியாண்டி மகள்.
ஞாபகம் இருக்கா ஆயா?”
“ராதையா இது? ஆளே மாறிட்டியே? எப்படி
இருக்க?”
என்னை அடையாளம் கண்டுகொண்ட ஆயாவின் முகத்தின்
அவ்வளவு மகிழ்ச்சி. நான் வந்த காரணத்தை சொன்னதும் மகிழ்சி இரட்டிப்பானது. ஆயா
கொட்டாயில், நான் விளையாடிய இடத்தில் கொஞ்ச நேரம் ஆயாவோடு அமர்ந்தேன்.
இந்த பத்து வருட காலத்தில் என் வாழ்வில்
நடந்ததையெல்லாம் ஆயாவிடம் பகிர்ந்து கொண்டேன். தாயின் இறப்புச்செய்தி கேட்டு
கண்கலங்கினார். ஒரு தோட்டப்புற சிறுமி மருத்துவராய் மாறிய கதைகேட்டு வியந்தார். இன்னமும்
மாறாமல் இருக்கும் இந்த தோட்டத்து கதையும் சொன்னார்.
“இங்க எதுவுமே மாறலம்மா.
உன் கூட படிச்சவங்க எல்லாம் இப்ப கல்யாணம் பண்ணிட்டு இங்க தான் இருக்காங்க. ஒன்னு
ரெண்டு கம்பனி வேலை கெடச்சி டவுன் பக்கம் போயிருச்சிங்க. மற்றபடி எல்லாமே அப்படியே
தான் இருக்குதும்மா”
எல்லோரை பற்றியும் சொன்னவர், மாதவனைப் பற்றி
எதுவும் சொல்லவில்லை. எனக்கும் கேட்க துணிவில்லை. மாதவன் எங்கள் தோட்டத்து மேனஜர்
மகன். என்னோடு படித்தவன்தான். நான் அவனை காதலித்த செய்தி யாருக்குமே தெரியாது. கடைசி
வரைக்கும் அவனுக்கும் தெரியாமலே போனது. நான் எழுதிவைக்கும் கவிதைகளில் மட்டும்
அவ்வபோது என்னையும் மீறி வெளிப்படும், அந்த சொல்லாத காதல்.
மேனஜேர் மகனெல்லாம்
பெரிய இடத்து பிள்ளைங்க
பார்த்து பேசுன்னு
பெத்தவ சொல்லிவச்சும்...
உன்னையே காதலிக்க
துணிஞ்ச என் மனசுக்கு
காதல சொல்லைமட்டும்
சக்தியின்றி போனதடா...
புத்திக்கும் தெரியாம
பொத்தி பொத்தி வளத்த காதல்
இன்னும் எம்மனசில்
ஆழ மரமா நிற்குதடா..
“உன் கூட்டாளி செல்வியை பார்க்கலையா?”
கவிதைக்குள் மூழ்கிய என்னை தட்டி எழுப்பினார் ஆயா. செல்வி சிறுவயதில் இருந்தே என் நெருங்கிய தோழி.
முன்றாம் ஆண்டோடு படிப்பை நிறுத்திக் கொண்டாலும் கடைசி வரைக்கும் என்னோடு
நெருக்கமாக இருந்த ஒரே தோழி
“அடுத்து அவ வீட்டுக்கு தான் போறேன் ஆயா.” ஆயாவிடம்
இருந்து விடைபெற்று செல்வியின் வீடு நோக்கி சென்றேன்.
“ஏய் ராதா, எப்படி இருக்க? திடிர்னு வந்து
நிற்குற?” செல்வி என்னை பார்த்த மகிழ்சியில் துள்ளி
குதித்தாள். இத்தனை வருடங்கள் கழித்தும் மாறாத அன்போடு என்னை வரவேற்றாள்.
தோட்டங்களில் மட்டும்தான் ஆண்டுகள் மாறினாலும் அன்பு மாறாத உறவுகள் அதிகம் உண்டு.
பள்ளி முடிஞ்சி நானும் வர
வேல முடிஞ்சி நீயும் வர
வேலக்காட்டு உடுப்போட
வந்து என்னை பார்ப்பாயே
ஒட்டுப்பாலு நாத்தமும்
உதிரிக்காய் பசப்பசபும்
என் மேல படாம
கட்டியணைச்சி போவாயே
உன்னோட படிப்பு
பாதியில நின்னாலும்
நான் படிச்சி பாஸ் ஆனா
நீ துள்ளி குதிப்பாயே
ஊரெல்லாம் எத்தனையோ
உறவுகளைப் பார்த்தாலும்
உன்னப்போல உண்மையான
ஒத்த தோழி கிடைக்கலையே
கண்ணில் நீர் மல்க கட்டியணைத்து பழங்கதை
பேசத்தொடங்கினோம். செல்வியிடமும் எங்கள் பள்ளி நண்பர்களைப் பற்றி கேட்டேன். அவளும்
மாதவனை பற்றி எதுவும் சொல்லவில்லை. உயிர்த்தோழி என்றாலும் எனக்கும் கேட்க
விருப்பமில்லை.
செல்வியிடமிருந்து விடைபெற்று கோவிலை நோக்கி
சென்றேன். தந்தையின் மறைவுக்கு பிறகு என் தாய்க்கு பெரும் ஆதரவாய் இருந்தது இந்த
கோவில் சுவர்கள் தான். இன்று என் தாயும் இல்லாத நிலையில் இந்த சுவர்கள் எனக்கும்
ஆறுதலாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் சுவரில் நானும் தலைசாய்த்து அமர்ந்தேன்.
என் தந்தை சாலை விபத்தில் இறந்த போது எனக்கு நான்கு
வயதுதான். அந்த நான்கு வயசு சிறுமி இன்று மருத்துவரானது மொத்தமும் என் தாயின் உழைப்பு.
தனியாளாக நின்று என்னை சிகரம் ஏற்றியவர் இன்றென்னை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.
இந்த கோவில் சுவரில் சாய்ந்திருப்பது வெகு நாட்கள் கழித்து என் தாயின் மடியில்
படுத்திருக்கும் நிம்மதியை தந்தது.
என்னை தாலாட்டும் அந்த நொடிகளில் நான் தூங்கிவிடும் முன்னர்
ஒரு தொலைப்பேசி அழைப்பு என்னை தட்டி எழுப்பியது. அழைத்தது சேது, என் வருங்கால
கணவர். சேது என்னை எங்கேயும் தனியாக அனுப்ப விரும்புவதில்லை. ஆனால் இன்று நான்
முழுமையாக என் பழங்கால நினைவுகளில் மூழ்கிவிட வேண்டுமென்று என்னை தனியாக அனுப்பி
வைத்தார்.
“எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்துட்டேன். இப்போ கோவிலில்
இருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிருவேன்.” அவர் கேட்பதற்கு முன்னரே
அவர் மனதிலுள்ள கேள்விகளுக்கு பதில் சொன்னேன்.
“சரி, மாதவனை
பார்த்தாயா? ஏதும் தகவல் கிடைத்ததா?” சேது நான் எதிர்பார்க்காத ஒரு கேள்வியை
கேட்டார்.
நான் யாரிடமும் சொல்லாத, சொல்ல விரும்பாத என்
முதல் காதலை சேதுவிடம் சொல்லியிருக்கிறேன். அதை புரிந்துகொள்ளும் பக்குவம்
அவருக்கு இருந்ததால் சொல்லும் தைரியம் எனக்கு இருந்தது.
“இல்ல, தேடணும்னு தோனல.”
நானும் அவர் எதிர்பாராத ஒரு பதிலைச் சொன்னேன்.
தாய் பாடும் தாலாட்டு
எனக்காக நீ பாட
தந்தையாய் வழிகாட்ட
தோழனாய் தோள்கொடுக்க
யாதுமாக எனக்காக
எப்போதும் நீயிருக்க
நான் பேசி கேட்கவும்
என்னுணர்வை மதிக்கவும்
என் சிரிப்புக்கு காரணமாய்
வாழ்வுக்கு அர்த்தமாய்
எந்நாளும் எந்நொடியும்
எனக்காக நீயிருக்க
வேறென்ன வேண்டும் தலைவா
இந்த ஏழைப்பொண்ணு வாழ்வதற்கு
No comments:
Post a Comment