“கயல்விழி இருக்காங்களா?”
பள்ளி பாதுகாவலரிடம் அவளைப் பற்றி விசாரித்தேன். நான்
யாரென்று கேட்டார்.
யாரென்று சொல்வது கயல். உனக்கும் எனக்குமான உறவுக்கு இப்போது என்ன பெயர் வைப்பதுவோ தெரியலையே. என் பெயரைச் சொல்லி நண்பன் என்று அறிமுகப்படுத்தினேன்.
அழைத்து வருவதாய் சொல்லி என்னை காத்திருக்க சொன்னார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மித்ராவை சந்தித்த பிறகு,
பார்த்திபனை சந்திக்க அவன் பணியாற்றும் தமிழ்ப்பள்ளிக்கு சென்றேன்.
அவளும் ஆசிரியராக இருந்தவள் என்பதால் அவன் உதவியையும் நாடினேன்.
அவனை சந்தித்து வரும்போது அந்த பள்ளியின் அறிவிப்பு பலகையில் சுவரொட்டி ஒன்றை பார்த்தேன். இன்று இங்கே நடக்கும் இந்த முகாமை பற்றிய அந்த சுவரொட்டியில் ஏற்பாட்டாளர் பட்டியலில் “கயல்விழி பீஷ்மர்” என்று அவள் பெயர் இருக்கக் கண்டேன். அது அவள்தான்.
அவளாகத்தான் இருக்க வேண்டுமென்று உறுதியாக நம்பினேன்.
“என் பெயர் வித்தியாசமா இருந்தாலும் அது தமிழ் பெயர்.
உன்
அப்பா பேர் தான் வழக்கத்திலும் இல்ல தமிழிலும் இல்ல. எங்கிருந்து கண்டு பிடிச்சி வச்சாங்களோ இந்த பெயரை?”
வழக்கத்தில் இல்லாத அவள் தந்தையின் பெயரை கிண்டலாய் பேசிய
நாட்கள் நினைவுக்கு வந்தது. தர்மம் மீறாது வாழ்ந்த கங்கை மைந்தனின் அந்த பெயர்தான் இன்று அவளை அடையாளம் காண உதவியது.
அந்த சுவரொட்டியை கையோடு எடுத்துக்கொண்டு அங்கிருந்து
புறப்பட்டேன். இன்று இங்கே அவளுக்கு மிக அருகில் வந்து விட்டதாய் உணர்கிறேன்.
“கொஞ்ச நேரம் அங்க உட்கார்ந்திருங்க. வந்திருவாங்க.”
பள்ளி பாதுகாவலர் என்னை பள்ளியின் விருந்தினர் அறையில்
அமரச் சொன்னார்.
நிலவே நீ தேய்ந்தது போதும்
இது பௌர்ணமி காலம்
பூக்களே உன் சோகம் போதும்
இது வசந்த காலம்
விழிகளே நீயழுதது போதும்...
இது விண்மீன் காணும் நேரம்..
இதயமே உன் காயங்கள் ஆறும்...
இது ராசாத்தி வரும் நேரம்...
“எப்படி இருக்கிங்க”
கவிதைக்குள் மூழ்கிய என்னை கவிதையொன்று எழுப்பியது. வந்தது
அவள்தான், என் ராசாத்தி. பத்தாண்டுகள் கழித்து அவள் குரல்கேட்டு முகம் பார்த்த அந்த நொடி,
என் இதயத் துடிப்பையே நிறுத்தப் பார்த்தது. வயிற்ருக்கும் தொண்டைக்கும் இடையே உருண்டையொன்று உருளுமாமே? எனக்கு அங்கே கலவரமே நடந்ததுபோல இருந்தது.
என்னுள்
நடக்கும் கலவரத்தை அவளிடம் காட்டிக்கொள்ளாமல் புன்னகைத்து நலம் என்றேன். அவளுக்குள் கலவரம் ஏதும் நடப்பதாய் தெரியவில்லை.
பத்தாண்டுகளாய் மனசுக்குள்ளும் கவிதைக்குள்ளும் அவளோடு
நிறையவே பேசிவிட்டேன். இன்று சந்தித்த பிறகு வார்த்தைகள் தொலைத்து தவிக்கிறேன். அவளுக்கும் அதே நிலைமைதான் போல. இரண்டு மூன்று வார்த்தைகளில் கேள்விகளும் ஒற்றை வார்த்தையில் பதிலுமாக எங்கள் உரையாடல் தொடர்ந்தது. இடையிடையே சில நொடி மௌனங்கள்
வேறு.
“அம்மா, சாப்பிட
வரலையா?”
எங்கள் உரையாடலை ஒரு மழலை குரல் நிறுத்தியது. அவளை நிகழ்கால
வாழ்க்கை எனக்கு இப்போடு ஓரளவு புரிகிறது. அவள் வாழ்க்கையில் புதிய உறவுகள் இருப்பதை
உணர்ந்தேன்.
அந்த சிறுமியை அனுப்பி வைத்து மீண்டும் வாய்திறந்தாள்.
“அது பிரியா. என் மகள்.”
மணமான பெண்ணின் அலங்காரங்கள் எதுவும் அவளிடம் இல்லை.
ஆனாலும் அம்மான்னு உரிமையோடு அழைக்கிறது ஒரு மழலை. என் மனதுக்குள் எழுந்த கேள்வியை
என் கண்களில் கண்டாளோ என்னவோ, அவளே தொடர்ந்து பேசினாள்.
“பிரியா என் வளர்ப்பு மகள். ஆறு மாச குழந்தையா இருக்கும்
போது தத்தெடுத்தேன். இப்போ அவளுக்கு எல்லாமே நாந்தான். எனக்கு அவள்தான்.”
அவளின் இந்த பத்தாண்டு வாழ்க்கை புதிராகவே இருந்தது.
அவள் எத்தனையோ காயங்கள் கடந்து வந்ததை அவள் கண்களும் நிகழ்காலமும் சொல்கிறது. அவளின் நிகழ்காலம் நான் நினைத்ததைப் போல இல்லை.
“என்னதான் ஆச்சி?”
என் கேள்வியின் அர்த்தம் புரிந்தவள் கடைசியாய்
பேசத்தொடங்கினாள். எங்கள் பிரிவிற்கு பிறகு அவள் வீட்டில் அவசரமாய் கல்யாண ஏற்பாடு நடந்ததை சொன்னாள்.
அவளைப் பற்றி எனக்கு கிடைத்த கடைசி தகவலும் அதுதான். அவள் விருப்பமே இன்றி கல்யாண ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்க அவள் தன்னை தனிமைபடுத்திக் கொண்டாள்.
கல்யாணத்திற்கு சில வாரங்கள் இருக்கும் போது அவள் தந்தை
சாலை விபத்தில் இறந்ததை சொன்னாள்.
அவள் குடும்பத்திற்கு ஆணி வேராக இருந்தது அவள் தந்தைதான். அவரின் மறைவு அவள் குடும்பத்தை உறுக்குழைய செய்திருக்கிறது. கடைசியாய் அந்த கல்யாணம் நடக்காமலே போனது.
குடும்பத் தலைவனின் மறைவுக்கு பிறகு ஒவ்வொரு குடும்பமும்
சந்திக்கும் வேதனைகளையும் சிரமங்களையும் அவளும் அவள் தாயும் சந்தித்திருகிறார்கள். தந்தையின் மறைவு அவள் தாயை அதிகமாய் பாதித்ததால் மாறுதலுக்காக வீட்டை வாடகைக்கு விட்டு தூரமாய் சென்றுவிட்டார்கள். அவளுக்கும் அந்த மாறுதல் தேவைப்பட்டிருக்கிறது.
என்னிடம் சொல்லாமல் போன காரணத்தை அவள் சொல்லவே இல்லை.
நானும் கேட்கவில்லை. அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்ததும் விலகியிருப்பதே நல்லதென்று நானும் விலகிவிட்டேன். அப்போதே மீண்டும் தேடிப்போகாதது
என் குற்றம்தான். கடைசிவரைக்கும் வருவதாய் சொன்னவன் கதவடைத்த காரணத்திற்கே விட்டு போனானேயென்று கலங்கிப்போனாளோ என்னவோ. இப்போது ஏன் சொல்லவில்லை என்று கேட்பதில் நியாமில்லையே.
அவள் தொடர்ந்து தன் வாழ்வில் நடந்ததை சொன்னாள்.
தாயின் மறைவு,
சிறார் இல்லம்,
பிரியா என்று அவள் கடந்து வந்ததை சொல்லி முடிக்கும் போது என் கண்கள் கலங்கியது. ஆனால் அவள் கண்ணில் ஈரமில்லை. கண்ணீர் வற்றிப்போகும்வரை அழுதுவிட்டாளா
என் கயல்விழி.
“கொஞ்சம் இருங்க. பிரியா சாப்பிட்டளானு பார்த்துட்டு வரேன்.”
அவள் என்னை வாங்க போங்கன்னு கூப்பிடறதே புதுசு.
வாலுப்பையா
என்றென்னை கூப்பிட்ட கயல்விழி எங்கே?
இத்தனை காலத்தில் என்னை தேடி வரவேண்டுமென்றே அவளுக்கு தோணவில்லையா? இப்போதும் கூட அவள் விழிகள் உணர்வுகள் இல்லாமல் வரண்டுபோய் தான் இருக்கிறது. அழுத்தக்காரி என் விழிபார்த்து பேசவும் மறுக்கிறாள்.
பிரியாவை பார்த்துவிட்டு வந்தவள் என்னை சாப்பிட அழைத்தாள்.
பசியில்லை என்றேன்.
மீண்டும் எங்களுக்கும் மௌனம் தொடர்ந்தது.
"இ-மெல் பண்ணியிருந்தேன். கிடைச்சதா?"
பதிலேதும் சொல்லாமல் தலையாட்டினாள். வேறெதுவும் கேட்காமல் நானும் மௌனத்தை தொடரவிட்டேன். என் கவிதைகள் அனைத்தையும் வாசித்திருந்தால் நான் வந்த காரணம் அறிந்திருப்பாள்.
இனி அவள்தான் சொல்ல வேண்டும், பதிலையும் அவள் முடிவையும்.
“எப்படி தெரிந்தது? நான் இங்க இருக்கேன்னு?”
கவிதைக்கு பதில் கிடைக்கும் என்று
காத்திருந்த எனக்கு இன்னொரு இன்னொரு கேள்விதான் கிடைத்தது. பதிலேதும் சொல்லாமல் அந்த
சுவரொட்டியை காட்டினேன். சுவரொட்டியில் தன் பெயரை பார்த்ததும் அவள் விவரம் புரிந்து
கொண்டாள். என்னை தொட்ட நினைவுகள் அவளையும் தொட்டதுவோ என்னவோ. அவள் இதழோரமாய் புன்னகை
எட்டிப்பார்த்தது.
நான் பிரியாவை பற்றி கேட்டது அவளுக்கு அதிர்ச்சியை
தந்தது. எப்படி தெரியுமென்று கேட்டாள். கவிதை படித்த கதையை சொன்னேன். மாலினியை
சந்தித்து பேசியதையும் சொன்னேன். சுவரொட்டியில் பெயர்பார்த்து ஓடி வந்ததையும்
சொன்னேன்.
“ஏன் திடீர்ன்னு…?”
ஏன் வந்தாய் என்று கேட்கிறாளா இல்லை இத்தனை காலமாய் ஏன்
வரவில்லை என்று கேட்கிறாளா? முற்று பெறாத அவள் கேள்வியின் அர்த்தம் புரியவில்லை. கவிதை
கண்ட கதை சொன்னேன். அவளை தேடி அலைந்த கதையும் சொன்னேன்.
"அந்த கவிதையை நீங்க படிப்பீங்க, இவ்வளவு தூரம் கொண்டு வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, நான் அதை எழுதியிருக்கவே மாட்டேன்."
அவள் வார்த்தைக்குள் அவளின் பதிலும்
அடங்கி இருப்பதை என்னால் உணர முடிகிறது. அதன் காரணத்தையும் என்னால் யூகிக்க முடிகிறது.
புருவம் உயர்த்தி எதையொ யோசிக்கிறாள்.
நொடிக்கு ஒரு முறை கடிகாரம் பார்க்கிறாள். ஏதோ புதிதாய் பார்ப்பதுபோல் தன் பள்ளியை
அங்கும் இங்கும் பார்க்கிறாள். ஆனால் என் விழி பார்க்க மறுக்கிறாள். அவளே பேசட்டும்
என்று மௌனித்திருந்தேன்.
"நமக்குள் முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். என் வாழ்க்கை முன்ன மாறி இல்ல. இனி என் வாழ்க்கை பிரியாவுக்காகவும் இந்த குழந்தைகளுக்காகவும் தான்."
அவளின் இந்த முடிவு நான் எதிர்பார்த்த ஒன்றுதான்.
இத்தனை ஆண்டுகளாய் அவள் கடந்து வந்த பாதையின் காயங்கள் அதிகம்.
தீடீரென்று நான் வா என்று அழைத்ததும் ஓடி வந்துவிடுவாளா என்ன? அவளுக்கும் பிரியாவுக்கும் இடையே யாருக்கும் இடமில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டாள். அவள் பிரியாவின் தாயாக இருந்து யோசிக்கிறாள். அவளின் இந்த முடிவு முட்டாள்தனமென்று எளிதாய் சொல்லிவிடலாம். ஆனால் அவள் விழியில் இருந்து பார்த்தால்தானே அவளுக்கான நியாயம் தெரியும்.
"முகாம்ல நிறைய வேலைகள் இருக்கு. வாலெண்ட்டியர் சிலர் வரல. நான் போகனும்."
வேலை இருப்பதாய் சொல்லி விடைசொல்ல பார்க்கிறாள்.
"சரி, அப்ப நானும் கிளம்பறேன்."
விடைசொல்லி நானும் புறப்பட்டேன். விடைசொன்ன அவளே என்னை வழியனுப்ப முடியாமல் தடுமாறினாள்.
"எதுவும் சாப்பிட்டு போறீங்களா?"
முடிந்து போன உரையாடலை தொடரப் பார்க்கிறாள். என் தரப்பு பதிலேதும் சொல்லாமல் விடைபெரும் என்னை வழியனுப்ப மறுக்கிறாள்.
"இல்ல பறவால. வேலைக்கு லீவ் சொல்லிட்டு தேவையான துணிகள் எடுத்துகிட்டு இரவுக்குள்ள வந்திடறேன். தங்கறதுக்கு இடம் இருக்கும்ல."
நான் சொன்னதைக் கேட்டதும் அவள் கண்களில் வியப்பு.
"உதவிக்கு ஆள் பத்தலனு சொன்னியே. நான் இருக்கேன்."
சட்டென்று தலையாட்டி மறுத்தாள்.
"பரவால.
உங்களுக்கு கஷ்டம் வேண்டாம். நான் பார்த்துக்கறேன்."
வேண்டாமென்று மறுத்தாலும் அவள் விழிகள் பல வினாக்களோடு என் கருவிழி பார்த்தது. கடைசியாய் என் கண்பார்த்து பேச துணிந்தாள்.
"நான் இருக்கேன் கயல்.......எப்போதும், எந்நாளும்,
நான் இருப்பேன் கயல்."
நான் சொன்னது பதிலல்ல, என் முடிவு. அது முடிவும் அல்ல, எங்கள் ஆரம்பம்.
என் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து கொண்டாள். பத்தாண்டுகளுக்கு முன்பு சொல்லியிருக்கவேண்டிய வார்த்தை. இப்போதாவது சொல்லி தொலைத்தானே என்ற மகிழ்சி அவள் முகத்தில் தெரிந்தது.
சிரிக்கத் துடிக்கும் இதழ்களை கடித்துக் கொண்டாள்.
கண்கள் சிரித்தது,
காதல் வழிந்தது.
வனவாசம் என்றாலும்
ராமன் போன வழியே
போனவள் சீதையடி...
இங்கே சீதை நானடி
என் வாழ்வே நீயடி
வாடி ராசாத்தி
வாழ்ந்துதான் பார்ப்போமே
No comments:
Post a Comment