Pages

ராசாத்தி 1 - அவள் பெயர் ராசாத்தி


"வாலு பையா..!!!"

இதயத் துடிப்பை ஒரு கணம் நிறுத்தியது, யாரோ யாரையோ அழைத்த குரல்.என் காதை வறுடியது அவள் குரலல்ல. ஆனாலும் குரல் வந்த திசை தேடி விழிகள் அலைமோதியது. ஒரு தாய் கல்யாண மண்டபத்தை நோக்கி ஓடிய தன் பிள்ளையை அழைத்திருக்கிறாள்.

ஈரைந்து ஆண்டுகள் கழித்து என் நண்பனின் திருமணத்திற்காக மீண்டும் இந்த பல்கலைகழகத்தில் காலடி பதித்துள்ளேன்.

"வாலு பையா, சும்ம ஒரு இடமா இருக்க மாட்டியா?"

மீண்டும் அந்த தாயின் குரல். அந்த தாய் தன் பிள்ளையை செல்லமாய் திட்டுவது அவள் என்னை செல்லமாய் அழைத்த நாட்களை நினைவு படுத்தியது.

தமிழில்தான் பெயர் வைக்க வேண்டுமென்று என் தாய் பிடிவாதமாய் எனக்கு சூட்டிய பெயர் கிள்ளிவளவன். வீட்டில் வளவன் என்றழைப்பர். நண்பர்கள் வல்லா என்று அழைப்பர். அவள் மட்டும்தான் செல்லமாய் வாலுப்பையாஎன்றழைப்பாள்.

நீ வச்ச செல்ல பேரு...
செல்லமாய் நீ அழைச்ச நாளு...
இல்லாமல் போகுமென்று
அந்நாளில் தெரியாதடி...

இந்நாளில் நீ இல்லாம
செல்லமாய் பேர் சொல்லாம
கடக்கின்ற நாளும் பொழுதும்
உயிர்வரைக்கும் வலிக்குதடி.

"வல்லா, என்னடா வெளிய நிற்கிற? வா உள்ள போகலாம்"
பழங்காதல் நினைவுகளில் மூழ்கி கிடந்த என்னை தட்டி எழுப்பினான் பார்த்திபன். எங்கள் நண்பர் கூட்டத்தில் முதலில் திருமணம் செய்தவன். இன்று தன் மனைவியும் இரண்டு பிள்ளைகளோடும் வந்துள்ளான்.

வா போகலாம்" என்று நானும் அவர்களோடு மண்டபம் நோக்கி நடந்தேன்.

நாம பரீட்சை எழுதற இந்த மண்டபத்தில் ஏன் முரளி கல்யாணத்தை வச்சிருக்கான் சொல்லு?”

பார்த்திபன் தனக்கே உரிய கிண்டலான பாணியில் கேட்டான். பதிலை அவனே சொல்லட்டுமென்று ஏனென்று கேட்டேன்.

“இதுவும் சோதனை தான் மச்சி. சத்திய சோதனை.”

சிரித்தபடியே மண்டபத்தை சென்றடைந்தோம். இத்தனை நாட்களாய் சந்திக்காத எத்தனையோ முகங்களை மீண்டும் பார்த்தேன். அவள் மட்டும் வரவில்லை. அவள் இருக்கும் திசைகூட யாருக்கும் தெரியாதபடி எல்லோரிடமும் இருந்து விலகிவிட்டாள்.

ஆண்டுகள் பல கடந்து சந்திக்கும் நண்பர்களின் உரையாடல் தொடங்கியது. பல்கலைக்கழக நினைவுகளை அசைபோட தொடங்கினோம். கெட்டி மேளம் முழங்க கல்யாணமும் நடந்தது. விருந்து உபசரிப்பும் முடிந்தது. ஆனால் நண்பர்களில் உரையாடல் ஓயவில்லை. எங்கள் உரையாடல்கள் நினைவுபடுத்திய ஒவ்வொரு நினைவுகளிலும் அவளும் இருக்கிறாள். இந்த உரையாடல் நீடித்தால் என்னையும் அறியாமல் விழி சிவந்து விடுமோ என்றஞ்சி விடைபெற தொடங்கினேன்.

ஒரு வழியாக எல்லோரையும் சமாளித்து விடைபெற்று மண்டபத்தின் நிழைவாயில் வரை வந்துவிட்டேன். நான் புறப்படுவதை அறிந்த மித்ரா ஓடி வந்தாள்.

ஏன் சீனியர் அதுக்குள்ள கிளம்பிட்டீங்க? எல்லோரும் ரொம்ப நாள் கழித்து சந்திக்கறோம். கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டு போகலாம் தானே?”

பட படவென்று பேசி முடித்தாள்.
இல்ல மித்ரா. கொஞ்சம் வேலை இருக்கு.என்று சொல்லி முடித்து புறப்பட தயாரானேன்.

அது சரி, வர வேண்டியவங்க வந்திருந்தா நீங்களும் இருந்திருப்பிங்க.

எங்கள் உறவையும் பிரிவையும் அறிந்தவள் அவளைப் பற்றி பேசத் தொடங்கினாள்.

அப்படி ஒன்னும் இல்ல. அவளைப் பற்றிய உரையாடல் தொடர்வதை விரும்பாமல் சுருக்கமாகவே பதில் சொன்னேன்.

சரி சீனியர். உங்க கூட்டத்தில் எல்லாரும் கல்யாணம் பண்ணிட்டாங்க. நீங்க எப்போ கல்யாண சாப்பாடு போட போறிங்க?"

அவளைப் பற்றிய உரையாடலை நான் தவிர்க்கிறேன் என்றறிந்தவள் என்னைப் பற்றி கேட்கத் தொடங்கினாள்.

வெறுமையாய் புன்னகைத்து குட்டி கவிதையொன்றை சொன்னேன்.

அவளை நான் மணந்தால்
கல்யாண சாப்பாடு
மரணம் எனை மணந்தால்
கருமாதி சாப்பாடு

அழைப்பிதல் எதுவாயினும்
வந்துவிட தவறாதே
மொய்ப்பணமோ மலர்வலையமோ
கொண்டுவர மறவாதே

படிக்கும் காலத்தில் இருந்தே என் கவிதைகளின் பெரும் ரசிகை மித்ரா. அவளை விடவும் அதிகமாய் என் கவிதைகளை ரசித்தவள் மித்ராதான். ஆனாலும் இந்த கவிதையை அவளால் ரசிக்க இயலவில்லை.

பத்து வருஷமாச்சி சீனியர். இன்னும் ஏன் பழசையே நினைச்சிகிட்டு இருக்கிங்க?”

பத்து வருடங்களாய் கேட்டு கேட்டு சலித்துப்போன கேள்வியை மித்ராவும் கேட்டாள்.

இந்த முறை பதிலேதும் சொல்லாமல் வெறுமையாய் புன்னகைத்து விடைபெற்றேன். என் புன்னகையின் அர்த்தம் புரிந்தாற்போல அவளும் புன்னகைத்து மண்டபத்தின் உள் சென்றாள்.

மித்ரா சொன்னது உண்மைதான். அவள் வெகுதூரம் போய் விட்டாள். எனை பிரிந்த சில காலம் கழித்து மீண்டும் அவளைத் தேட தொடங்கினேன். அவளைப் பற்றிய தகவல் யாருக்கும் தெரியவில்லை. முகவரி மாற்றிக் கொண்டாள். முகநூலையும் மூடி விட்டாள். பத்தாண்டுகள் ஓடி மறைந்து விட்டது. இன்னும் அவள் இருக்கும் திசை கூட தெரியவில்லை.

இந்த விஞ்ஞான காலத்தில் அவளை தேடிப்பிடிப்பது முடியாத செயலல்ல. அவள் அதை விரும்பமாட்டாள் என்றே நானும் விலகியிருந்தேன். முகநூலையும் அகநூலையும் யாருக்கும் திறவாதபடி மூடிவைத்து பத்தாண்டுகள் கடந்துவிட்டேன்.

மண்டபத்தை விட்டு விரைந்து வெளியேறிய என்னால் அந்த பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற முடியவில்லை. பழைய நினைவுகளுக்குள் சிக்கிக்கொண்ட மனசு சாலைகளிலேயே வட்டமிட்டு வந்தது.

நீயில்லாத பொழுதுகள்..
நீயில்லாத நிமிடங்கள்...
நீயில்லாத பயணங்கள்...
நான் மட்டும் தனியாக...

உன்னோடு நடைபழகிய நாட்கள்
உன் பாதம் பதிந்த சாலைகள்
நீ தொட்டுப் பார்த்த செடிகள்
நான் மட்டும் தனியாக..

நீ காட்டிய திசை...
நீ காட்டிய வழி...
நீ துணைவந்த பயணம்..
இன்று நான் மட்டும் தனியாக..

கவிதையாய் வாழ்ந்த நாட்களை நினைத்தபடி கவிதையோடு சுற்றிய நான் நூலகத்தின் ஓரமாய் வாகனத்தை நிறுத்தினேன்.

சட்டென்று ஒரு ஞாபகம். எங்கள் ஞாபகத்தை சுமந்த ஒரு புத்தகம் அந்த நூலகத்தில் இருக்க வேண்டும். எங்கள் நினைவாக ஒரு புத்தகத்தில் இருவரும் கையொப்பம் இட்டு அந்த நூலகத்திலேயே மறைத்து வைத்தோம். அது இப்போதும் அங்கேயே இருக்கக்கூடும் என்ற பேராசையில் நூலகம் நோக்கி நடந்தேன்.

முன்னாள் மாணவர் பதிவு அட்டையை பயன்படுத்தி தற்காலிக நுழைவு அனுமதி பெற்று நூலகத்தினுள் நுழைந்தேன். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதன் தோற்றம் மாறவே இல்லை.

நாங்கள் புத்தகத்தை மறைத்து வைத்த பகுதிக்கு சென்று புத்தகத்தை தேட தொடங்கினேன்.  இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்த புத்தகம் எங்கள் நினைவை சுமந்து அதே இடத்தில் தான் இருந்தது.

"என்றாவது ஒரு நாள் நாம ரெண்டு பேரும் இந்த புத்தகம் தேடி இங்க வரலாம்"

அன்று அவள் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

நான் வந்துவிட்டேன். நீ எங்க போன ராசாத்தி?

அவள் கைபட்ட அந்த புத்தகத்தை சில நொடிகள் வெறித்து பார்த்துவிட்டு நாங்கள் கையொப்பம் இட்ட பக்கம் தேடி புத்தகம் புரட்டினேன். எங்கள் கையொப்பங்களை சுமந்திருந்த பக்கம் இன்று ஒரு கவிதையையும் சுமந்திருந்தது.

அது அவள் கையெழுத்துதான். இன்னமும் கூட மெய்யெழுத்துக்கு புள்ளியிடாமல் வட்டமிட்டு வைத்திருக்கிறாள்.

எப்போது வந்தாளோ தெரியவில்லை. எனை காண வந்தாளா, நினைவை தேடி வந்தாளா இல்லை எனைபோல நினைவில் வாடி வந்தாளா?

அவள் விட்டுச்சென்ற கவிதையை வாசிக்கவும் தயங்கினேன். பத்தாண்டுகள் கழித்து அவளைப் பற்றிய ஒரு தகவல். அவள் விட்டுச்சென்ற ஒரு செய்தி.

விட்டுப்போன ராசாத்தி
விட்டுச்செல்லும் கவிதையடா...
வாசிக்க வருவாயா மன்னித்து போவாயா

காதலிச்ச காலத்துல
வேற்றுமைகள் பார்க்கலயே...
கைப்பிடிக்கும் நேரத்துல சாதி வந்து கெடுத்ததுவே

சொந்தக்காரன் பத்தவச்சி
கை கட்டி நின்னானே...
பாசம் வச்ச அப்பன்கூட புத்தி கெட்டு போனானே

பொம்பல பேச்சிக்கு
எந்த வீட்டில் இடமிருக்கு...
என்னப்போல ஊமையாய் என் தாயும் நின்னாலே

நீதி கேட்டு வந்த உன்ன
விரட்டி அடிக்க கண்டேனே...
வீதியில நீ நிற்க வீட்டுக்குள்ள அழுதேனே

நீயழுத காட்சி இன்னும்
கண்ணுக்குள்ள நிற்குதடா
நான் அழுது நாளாச்சி கண்ணீர் வத்தி போனதடா

நீயின்றி நான் வாடி
பத்தாண்டு கடந்தாச்சி...
சண்டை போட்ட அப்பனும் சாமி கிட்ட போயாச்சி

தனிமரமா நின்ன தாயும்
மனம் தளர்ந்து போனாளே...
நிழலும் இல்லா தனிமையிலே எனைவிட்டு போனாளே

நீயில்லை என்றாலும்
நினைவுண்டு நான் வாழ...
நாளொன்று வர வேண்டும் உனை நினைத்தே நான் சாக

அவள் எழுதிவைத்த கவிதைக்கு முற்றுப்புள்ளியாய் என் கண்ணீர் துளிகள் விழுந்தன. பத்தாண்டுகளாய் நான் எழுதிவைத்த மொத்த கவிதையும் கூட அவளின் இந்த ஒற்றைக் கவிதைக்கு ஈடாகாது.

என்ன செய்வதென்று நான் யோசிக்கவே இல்லை. முதல் முறையாய் புத்தியும் மனசும் ஒரே முடிவை சொன்னது. அவளைத் தேடி போக சொன்னது.

அவள் கவிதைக்கு கீழே அவளை சந்திக்கும் நொடியில் நான் சொல்ல நினைக்கும் வார்த்தைகளை எழுதி வைத்தேன். புத்தகத்தை எடுத்த இடத்திலே வைத்துவிட்டு அவளைத்தேடி புறப்பட்டேன்.

"வாடி ராசாத்தி... வாழ்ந்துதான் பார்ப்போமே"

No comments:

Post a Comment