வாடி ராசாத்தி
வாழ்ந்துதான் பார்ப்போமே
சில நாட்களாய் என் மனசுக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இரண்டு வரி கவிதை
இதுதான். ராசாத்தி என்பது அவளுக்கு நான் கொடுத்த கவிதைப்பெயர். பத்தாண்டுகளாய்
அவளை கவிதைக்குள்ளும் மனசுக்குள்ளும் ராசாத்தி என்றே அழைத்து பழகிவிட்டேன்.
பத்தாண்டுகள் கழித்து மீண்டும் ராசாத்தியின் வீட்டு வாசலில் நிற்கிறேன். அன்று
என் வரவை விரும்பாமல் கதவடைக்கப்பட்டிருந்த வீடு இன்று யாருமில்லாமல்
கதவடைக்கப்பட்டிருந்தது. அன்று போலவே இன்றும் அவளைத் தேடி வந்துள்ளேன். தொலைந்ததை
தொலைந்த இடத்தில் தானே தேட வேண்டும்.
ராசாத்தியின் வீடு பல ஆண்டுகளாகவே பூட்டி கிடப்பதை வீட்டின் சுழலை பார்த்து
தெரிந்து கொண்டேன். அவள் வீடு மாறி சென்றதும் இந்த வீடு வாடகைக்கு
விடப்பட்டிருந்தது. இப்போது யாரும் இல்லாத நிலை அவள் எங்கோ வெகு தொலைவில்
இருப்பாளோ என்ற சந்தேகத்தை உருவாக்கியது. அக்கம் பக்கத்தில் யாரிடம் கேட்டாலும்
அவளைப் பற்றிய தகவல் இல்லை.
பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் வீட்டோர நிலப்பரப்பில் ஒரு ரோஜா செடி என் கண்ணை
கிள்ளியது. அந்த ரோஜா செடியில் இருந்து ஒரு தளிரை கிள்ளி எடுத்தேன். இந்த தளிரை
நட்டு வைத்து வளர்க்க வேண்டும். உன் தோட்டத்து செடியென்று அவளிடம் காட்ட ஒரு நாள்
வராமலா போய்விடும். என் குருட்டு நம்பிக்கையோடு அங்கிருந்து புறப்பட்டேன்.
அந்த நொடியில் அந்நாளில் நிகழ்ந்ததை அசைபோட்டு பார்த்தேன். கதவடைக்கப்பட்ட
நொடியில் அவள் கதவைத் திறந்து வந்திருந்தாள் வாழ்ந்திருக்கலாம். நான் கதவை உடைத்து
அவளை அழைத்திருந்தாலும் வாழ்ந்திருக்கலாம். நடந்தது என் குற்றமும் தானே. அவள்
மட்டும் குற்ற உணர்வோடு தன்னைத்தானே தண்டித்து வாழ்வது ஞாயமில்லை.
அவளைப் பற்றிய தகவல் தேடுவதிலேயே நாளும் பொழுதும் மூழ்கி கிடந்தேன்.
இப்போதைக்கு அவளின் பழைய மின்னஞ்சல் முகவரியைத் தவிர வேறெந்த தகவலும் என்னிடம்
இல்லை. அவள் வாசிப்பாளா இல்லையா என்று தெரியவில்லை என்றாலும் தினமும் அவளுக்கு ஒரு
மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன்.
எங்க போன ராசாத்தி
என்னுயிர் உன்ன தேடுதடி...
காதல் தந்த ராசாத்தி
கண்ணிர் கவிதையாய் வழியுதடி...
காலம் கடந்து போனாலும்
காதல் இன்னும் குறையலையே...
இதயத் துடிப்பு இருந்தாலும்
நீயின்றி என்னுள் உயிரில்லையே
வாடி ராசாத்தி
வாழ்ந்துதான் பார்ப்போமே...
இப்படி அவளை தேடி நாட்கள் நகர்வதும் நாளும் ஒரு கவிதையில் நானும் அழுவதுமாக
சில வாரங்கள் ஓடின. மேலும் அவளை எங்குதான் தேடுவதேன்றே தெரியாத நிலைக்கு
தள்ளப்பட்டேன். சமூக வலைத்தளங்களிலோ வானொலியிலோ அவளைத் தேடும் தகவலைக் கொடுக்கவும்
விருப்பமில்லை. அவ்வாறு செய்வதால் அவளை சந்திக்கும் வாய்ப்பு அதிகமிருந்தாலும்
அப்படி ஒரு நெருக்குதலை நான் அவளுக்கு கொடுக்க விரும்பவில்லை.
திசையே தெரியாமல் தொடர்ந்த என் தேடலுக்கு வழிக்காட்ட ஒரு தகவல் கிடைத்தது.
அவள் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம்
படித்திருக்கிறாள். செய்வதறியாது இணையத்தில் அவள் பெயரை அழுத்தி தேடி பார்த்தபோது
அவளின் ஆய்வறிக்கை ஒன்று இணையத்தில் இருக்க அதன் மூலம் கிடைத்த தகவல் தான் இது.
என் நண்பர்களின் மூலம் அவள் படித்த அந்த தனியார் பல்கலைக்கழகத்தில் அவளோடு
படித்த சில மாணவர்களை கண்டுபிடித்து தொடர்புகொண்டேன். அவள் அங்கு படித்தது
உண்மைதான். ஆனால் அவளோடு படித்த யாரிடமும் அவள் நெருங்கி பழகியதில்லை. அந்த இரண்டு
வருடமும் வருவதும் போவதும் கூட தெரியாத அளவுக்கு தனித்தே இருந்திருக்கிறாள்.
“அவுங்க
ரொம்ப சைலன்ட். யாரிடமும் சரியா பேசவே மாட்டாங்க.”
அவளோடு படித்த மாலினி அவளைப் பற்றி சொன்னது, அவள்
அவளாகவே இல்லையென்பதை புரியவைத்தது.
“ஆனா அவுங்க
இங்க வகுப்புக்கு வரும்போதெல்லாம் அவுங்க ப்ரென்ட் ஒருத்தவங்க அடிக்கடி வந்து பார்ப்பாங்க.”
என் கண்களில் தவிப்பை கண்டதாலோ என்னவோ, மாலினி
மேலும் ஒரு தகவல் கொடுத்தார்.
“அவுங்க
யாருன்னு சரியா தெரியல, ஆனா டிகிரி படிக்கும் போது ஒண்ணா
படிச்சவங்களாம். விசாரிச்சி பாருங்களேன்.”
மாலினி சொன்னது வியப்பைத் தந்தது. அவள் எங்கள் பழைய நண்பர்களில் யாரோ
ஒருவரிடமாவது இன்னும் தொடர்பில் தான் இருந்திருக்கிறாள். கண்டிப்பாக என்னைப்பற்றிய
தகவல் அவளுக்கு தெரிந்திருக்கும். ஆனால் தேடி வராதது ஏன்?
அவளைப் பற்றி வேறெதுவும் தகவல் தெரிந்தால் என்னை தொடர்புகொள்ளுமாறு
மாலினியிடம் கேட்டுக் கொண்டு விடைபெற்றேன்.
அவளோடு தொடர்பில் இருந்த எங்கள் பல்கலைக்கழக தோழி யாரென்று தேட நினைத்தேன். அந்த
நேரத்தில் என் ஞாபகத்துக்கு வந்தவள் மித்ரா.
மித்ரா எல்லோரிடமும் நெருங்கிப் பழகுபவள். அவளின் உதவியை நாடினால் அவள்
யாரிடமாவது விசாரித்து ஏதேனும் தகவல் சொல்ல கூடும் என்று நம்பினேன். மித்ரா
கண்டிப்பாக எனக்கு உதவுவாள் என்ற நம்பிக்கையும் இருந்தது. பத்தாண்டுகளாக முகநூளில்
நானெழுதும் கவிதைகளுக்கு முதல் லைக் அவளிடமிருந்து தான் வரும். என் காயம்
அறிந்தவள் கட்டாயம் உதவுவாள் என்ற நம்பிக்கையில் மித்ராவை தொடர்பு கொண்டேன்.
“சீனியர்,
அதிசயமா இருக்கு?”
மித்ரா என் கைப்பேசி அழைப்பை எடுத்ததும் ஆச்சரியத்தோடு பேசினாள். இந்த
பத்தாண்டுகளில் அவள் அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு பேசியதுண்டு. சில நேரங்களில்
அவளின் அழைப்புகளை பேச விரும்பாமல் புறக்கணித்தும் உள்ளேன். முதல் முறையாய் நான்
அவளை தொடர்புகொண்டு பேசுகிறேன்.
“மித்ரா,
எனக்கு ஒரு உதவி வேண்டும். பேசலாமா?”
உதவி வேண்டுமென்று நான் கேட்டதும்
குறும்புத்தனமான அவளின் சிரிப்பு நின்றது. சில நொடிகள் மௌனித்திருந்து
பதிலளித்தாள்.
“சொல்லுங்க
சீனியர்.”
No comments:
Post a Comment