Pages

காதலைக் கொன்ற மது


"சார், நான் பேசறது கேட்குதா?"

ஒரு மெல்லிய பெண் குரல் கேட்டு விழித்துப் பார்த்தேன். தாதி உடையணிந்த ஒரு பெண் என் அருகே இருந்தார். நான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். என் கை முறிந்திருக்கும் போல, கட்டுப்போட பட்டிருந்தது. தலையில் பலத்த காயமும் கூட. அந்த பெண்ணின் அழைப்புக்கு பதில் சொல்லவும் வலுவில்லாமல் விழி மூடி என்ன நடந்ததென்று யோசித்தேன்.

"நீ மது அருந்தியிருக்க தானே. நான் ஓட்டிகிட்டு போகிறேன்."

"மெதுவா போ. ஏன் இவ்வளவு வேகம்?"

யாழினி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. யாழினியும் நானும் பல்கலைகழகம் படிக்கும் காலத்தில் இருந்தே காதலர்கள். இன்று மாலை நான் தான் அவளை வற்புறுத்தி தீபாவளி விருந்துக்கு அழைத்துச்சென்றேன். அந்த விருந்திலிருந்து வரும் போது எங்கள் வாகனம் கட்டுப்பாடு இழந்து சாலைக்கு வெளியே சென்றது. அதன் பிறகு என்ன ஆனது?

கண்விழித்து அந்த தாதியைப் பார்த்தேன். நான் எதுவும் கேட்பதற்கு முன்னால் அவரே பேசினார்.
நான் விபத்துக்குள்ளாகி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதை சொன்னார்.

"என் கூட வந்தவங்க..." பதற்றத்துடன் யாழினியைப் பற்றி கேட்டேன்.

"அவுங்க பெயர் யாழினி தானே? அவுங்களுக்கு இன்னும் நினைவு திரும்பல. சிகிச்சை நடந்துகொண்டு இருக்கு." அவர் சொன்ன பதிலைக் கேட்டு உடைந்து போனேன்.

"யாழினி, உனக்கு என்ன ஆச்சி? நீ எங்க இருக்க? எப்படி இருக்க?" என்று எனக்குள்ளே புலம்பத் தொடங்கினேன்.

"நான் அவுங்கல பார்க்கனும். எங்க இருக்காங்க?"

அந்த தாதி யாழினிக்கு இன்னமும் தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருப்பதாகவும் அவளை தற்போது பார்க்க இயலாதென்றும் சொன்னார்.

"அது மட்டுமல்லாமல் அவுங்களோட பெற்றோர் வந்திருக்காங்க. நீங்க மது அருந்திட்டு வாகனம் ஓட்டியது எப்படியோ தெரிஞ்சிருக்கு. கோபமா ஏசிகிட்டு இருந்தாங்க. இப்போ போவது சரியா இருக்குமானு தெரியல."

அந்த பெண் சொன்னதை கேட்டு எனக்கே அவமானமாய் இருந்தது.

ஏன் தான் இந்த பாழாய் போன மதுவை குடித்தேனோ? இன்று என்னால் என் யாழினி அடிபட்டு கிடக்கிறாளே. குற்ற உணர்வில் நான் நொருங்கிப் போனேன்

என்னால் யாழினியை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அறையை விட்டு வெளியேறி அவள் இருக்கும் அறையைத் தேடினேன். தூரத்தில் யாழினியின் தந்தை ஐ.சி.யு அறைக்கு வெளியே இருப்பதைக்கண்டு அவரை நோக்கி விரைந்தேன்.

"அங்கிள், என்னை மன்னிச்சிருங்க. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. யாழினியின் உடல் நிலை எப்படி இருக்கு?"

நான் கேட்டதை அவர் சற்றும் பொருட்படுத்தவில்லை. என்னை ஏரெடுத்தும் பார்க்கவில்லை. அவர் என்னை சில வார்த்தைகள் கடுமையாய் ஏசியிருந்தாலும் தாங்கியிருப்பேன். மௌனத்தால் அடித்ததுதான் அதிகமாய் வலிக்கிறது.

அறைக்கதவின் கண்ணாடி வழி யாழினியைப் பார்த்தேன். சுவாசக் கருவி பொருத்தப்பட்டு மயக்க நிலையில் கிடந்தாள் என் யாழினி. புன்னகை பூக்கும் அவள் கண்ணத்தை கண்ணாடி துகள்கள் கிழித்திருந்தது. என்னை தாயாக அரவணைக்கும் அவள் கைகளில் காயங்கள்.

"ஐயோ யாழினி, உன்னை இந்த நிலையிலா நான் பார்க்கனும்?"

அவளைக் கண்ட நொடியில் கால்களும் வலுவிழந்து போக சிகிச்சை அறை முன்னாலேயே மண்டியிட்டு அழுதேன்.

"சார், இங்க இப்படியெல்லாம் அழக்கூடாது. உங்க சிகிச்சை இன்னும் முடியல. நீங்க உங்க அறைக்கு போங்க"

மீண்டும் அதே பெண். நான் சத்தமிட்டு அழுதுகொண்டிருப்பதை கண்டித்து என் அறைக்கு போக சொன்னார்.

நான் கதறியழுதபோதுகூட யாழினியின் பெற்றோர்கள் என்னை பொருட்படுத்தாமல் தான் இருந்தார்கள். அங்கிருந்து அவர்களின் கோபத்தை அதிகரிக்க விரும்பாமல் மீண்டும் என் அறைக்கு சென்றேன்.

"மன்னிச்சிருங்க சார். நீங்க அழுதது பார்க்க கஷ்டமா இருந்தது. அதான் அப்படி சொன்னேன். அவுங்க நினைவு திரும்பியதும் நானே வந்து சொல்றேன். நீங்க ஓய்வெடுங்க."

அந்த பெண் எனக்கு ஆறுதல் சொல்லி புறப்பட்டார்.  யாரோ ஒரு குடிகாரன் தானே என்று அலட்சியமாய் பார்க்காமல் என்னையும் கருணையோடு பார்க்கிறார். தாதியின் குணம் தாயின் குணம் அல்லவா?

அவர் பெயரைக் கேட்டேன். ராசாத்தி என்றார். வியப்போடு பார்த்தேன்.

"ஏன் அப்படி பார்க்கறிங்க?" என் பார்வையின் அர்த்தம் புரியாமல் கேட்டார்.

"இல்ல, அது என் யாழினிக்கு ரொம்ப பிடிச்ச பெயர்." நான் சொன்னதை கேட்டு புன்னகைத்து சென்றார்.

ராசாத்தி என்பது யாழினி எங்கள் காதலுக்கு வைத்த பெயர். அதை அவள் ஒரு கவிதையாய் எழுதி வைத்திருந்தாள்.

ம் காதல்
ஒரு பெண் தேவதை
அவள் உன்னையும் என்னையும்
பெற்றெடுத்தவள்
அவள் நீயும் நானும்
பெற்ற மகள்
நம் காதல்
ஒரு பெண் தேவதை
அவள் பெயர் ராசாத்தி

யாழினியின் நினைவில் காயங்களின் வலியையும் மறந்து படுத்திருந்தேன். மீண்டும் ராசாத்தி அறைக்குள் வந்தார். ஏதேனும் நற்செய்தி சொல்வாரா என்று ஆவலோடு பார்த்தேன்.

"சார், உங்க வீட்டுக்கு இன்னமும் தகவல் சொல்லவில்லை. உங்க பெற்றோரை தொடர்பு கொள்ளனுமா?"

ராசாத்தி சொன்னது பேரிடியாய் என் இதயத்தில் விழுந்தது. இப்போதைக்கு எதுவும் சொல்லவேண்டாமென்று மறுத்துவிட்டேன்.

நான் விபத்துக்குள்ளான செய்தி அறிந்தால் என் அம்மா கலங்கிப்போவார். அதுவும் நான் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் தான் இந்த விபத்தென்று தெரிந்தால் என்ன நினைப்பாரோ. இந்த செய்தி என் உறவினர்களுக்கெல்லாம் தெரிந்தால் என் பெற்றோர்களுக்கு எவ்வளவு அவமானம்.

என் பெற்றோர்களுக்கு பெருமையை சேர்த்திருக்க வேண்டிய நான் இப்படி ஒரு அவமானத்தை கொடுத்து விட்டேனே என்று வெட்கத்திலும் வேதனையிலும் தவித்தேன்.

மீண்டும் ராசாத்தி அறைக்குள் வந்தார். இந்த முறை புன்னகையோடு வந்தார்.

"சார். உங்க யாழினிக்கு நினைவு திரும்பிருச்சி. அவுங்க இப்போ ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு வந்துட்டாங்க. நீங்க போய் பார்க்கலாம்."

ராசாத்தியின் வார்த்தையைக் கேட்டபின் தான் என்னுயிர் மீண்டு வந்தது போல் இருந்தது. யாழினி என்னை அழைப்பது போல் உணர்ந்தேன். அவளைக்காண விரைந்து சென்றேன்.

போவதற்கு முன் ராசாத்தியை பார்த்து நன்றி சொல்லும் வகையில் புன்னகைத்தேன். அவரும் புன்னகைத்தார்.

யாழினி இருக்கும் ஐ.சி.யூ அறைக்கு சென்றேன். கதவுக்கு வெளியே இருந்து அவளைப் பார்த்தேன். யாழினியின் தாய் அவள் பிழைத்தக்கொண்ட மகிழ்சியில் அவள் கரங்களை அணைத்து அழுதுகொண்டிருந்தார். யாழினியின் விழிகள் என்னைத் தேடியது. அறைக்கு வெளியே நின்றுகொண்டிருக்கும் என்னை அவள் இன்னும் பார்க்கவில்லை.

அப்போது மற்றோரு அறையிலிருந்து ஒரு அழுகுரல். குரல் எனக்கு பழக்கமான குரலாக இருந்ததால் அந்த அறையின் கதவின் வழி எட்டி பார்த்தேன்.

அழுதுகொண்டிருந்தது என் தாயும் தந்தையும். செத்துக்கிடந்தது நான் தான்.

சட்டென்று திரும்பி ராசாத்தியை பார்த்தேன். ராசாத்தி கண்களில் கண்ணீரோடு மெல்ல மறைந்துகொண்டிருந்தார்.

No comments:

Post a Comment