இந்த கதை 2014 டிசம்பர் மாதம் மலேசிய வட மாநிலங்களை உலுக்கிய வெள்ளப்
பேரிடரின் போது நிகழ்ந்ததாக கற்பனை கதாபாத்திரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு
கற்பனை கதையே.
--------------------------------------------------------------------------------------------------------------------------
“ஐயா”
இருபது ஆண்டுகள் கழித்து முத்தையா வாத்தியாரை சந்திக்க வந்துள்ளேன்..
முத்தையா வாத்தியார் என் ஆறாம் ஆண்டு தமிழாசிரியர். நான் கிளாந்தான் பாசிர் காஜா
தமிழ்ப்பள்ளியில் படிக்கும் போது என் வகுப்பாசிரியராக இருந்தவர். போன வாரம் என்
நண்பன் மூர்த்தியை தொடர்பு கொண்டு என்னை வரச்சொல்லி அழைத்திருந்தார்.
மீண்டும் ஒரு முறை கதவைத் தட்டி ஐயா என்றழைத்தேன்.
உள்ளிருந்து கதவு திறக்கப்பட்டது. முத்தையா வாத்தியார் சற்று தடுமாறி நின்றபடி
என்னை உற்று பார்த்தார்.
“நீ நாவலன் தானே?” உற்று பார்த்த சில நொடிகளில் என்னை
அடையாளம் கண்டு கொண்டார். எப்படி மறந்திருக்க முடியும், நான் அவரின் செல்லப்பிள்ளை
ஆயிற்றே.
“நானேதான் ஐயா. மூர்த்தி கால் பண்ணான். நீங்க மீட்
பண்ணனும்னு சொன்னதா சொன்னான்.”
நான் பேசி முடிப்பதற்குள் அவர் பேசத் தொடங்கினார்.
“அடேங்கப்பா. கால்-ன்னு சொல்ற மீட்-ன்னு சொல்ற. முத்தையா
வாத்தியார் சொல்லித்தந்த தமிழ் எங்கடா போச்சி. சரி உள்ள வா.” என்று சொல்லி அவர் மெல்ல
நடந்தார். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் கிண்டலுக்கு ஆளானேன்.
கிளந்தான் மாநிலத்தில் உள்ள ஒரே தமிழ்பள்ளி எங்கள் தமிழ்ப்பள்ளிதான்.
பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், எங்கள் தேர்ச்சிக்காகவும்
பள்ளியின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்த ஆசிரியர்களில் முத்தையா வாத்தியாரும்
ஒருவர். ஆறாம் ஆண்டு தேர்வு காலங்களில் நானும் சில மாணவர்களும் அவர் வீட்டில்தான்
அடிக்கடி படிக்க செல்வோம். தேர்வு முடிந்து என் தந்தையின் வேலை காரணமாக
தலைநகருக்கு மாற்றலாகிப்போன பின் அவரை சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்தே போனது.
இப்படியே இருபது ஆண்டுகள் கடந்து விட்டது.
இத்தனை ஆண்டுகளில் அவரவர் வாழ்க்கை கண்ட மாற்றங்களை
இருவரும் பரிமாறிக் கொண்டிருந்தோம். உரையாடும் வேளையில் அவரின் வீட்டையும் அவர்
வாழ்க்கையையும் என் கண்கள் படம் பிடிக்க தொடங்கியது.
முத்தையா வாத்தியாருக்கு இப்போது அறுபது வயது இருக்கும்.
அவர் இளம் வயதிலேயே தன் மனைவியை இழந்தவர். மறுமணம் ஏதும் செய்யாமலேயே
வாழ்ந்துவிட்டார். இப்போதும் அவர் தனியாகத்தான் இருக்கிறார். தூசு தட்டாத
காற்றாடி, அலங்காரம் இல்லாத வரவேற்பறை, கலைந்து கிடக்கும் புத்தகங்கள் அவரின்
தனிமையின் அடையாளமாய் இருந்தன.
பழைய கதையெல்லாம் பேசி முடித்தபின் தான் அழைத்த காரணத்தை
சொல்ல வந்தார்.
“நாவலா, கிளந்தான் பக்கம் ஒரே வெள்ளமா இருக்கே. செய்தி
பார்த்தியா? நாமே இருந்த இடமெல்லாம் சரியான வெள்ளமடா.”
கனத்த தொடர் மழையால் மலேசியாவின் வட மாநிலங்கள் கடுமையான
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருகிறது. இது நாட்டை உலுக்கிய மிக மோசமான பேரிடர் என்றே
சொல்லலாம். இதில் எங்கள் பள்ளியும் அதன் சுற்று வட்டார பகுதியும்
பாதிக்கப்பட்டிருந்ததை நானும் கேள்வியுற்றேன்.
“ஆமாம் ஐயா. கிளாந்தான் மாநிலமே மோசமாக
பாதிக்கப்பட்டிருக்கு. இன்னமும் சாலைகள் மூடப்பட்டிருக்கு. தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருப்பதால்
சரியான தகவல் எதுவும் இன்னும் தெரியல.”
“நம்ப பள்ளி எப்படி இருக்குதுன்னு தெரியலையே. அடிச்ச
வெள்ளத்துக்கு எவ்வளவு சேதமாச்சோ தெரியல.”
முத்தையா வாத்தியாரின் முகத்தில் தவிப்பை காண முடிந்தது. நான்
அங்கு இருந்தது என்னவோ ஆறு ஆண்டுகள் தான். அவர் முப்பது வருடங்களுக்கு மேலாக
அங்கேயே பணியாற்றியவர். அவர் மனைவியின் சொந்த ஊர் கிளாந்தான். திருமணத்திற்கு பின்
அங்கே மாற்றலாகி போனவர் பதவி ஒய்வு பெறும்வரை அங்கேயே பணியாற்றிவிட்டார்.
“இந்த பள்ளியை விட்டு எங்கேயும் போயிரமாட்டேன்டா. இந்த
மண்ணும் மக்களும் எனக்கு ரொம்ப பிடிச்ச்சிருக்கு”
அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை இது. பள்ளியின் மேலும் தன்
மாணவர்கள் மேலும் தனி பாசம் வைத்திருந்தவர் அவர்.
“சரிடா. நாம போய் எதுவும் உதவ முடியுமான்னு பார்க்கறியா?
நம்ம பள்ளிக்கூடம் மட்டும் இல்லடா. பழகுன மனுசாளு நிறைய பேரு இருக்காங்க.”
அங்கே போகவேண்டுமென்று அவர் என்னை அழைத்தபோது சற்று
தடிமாறிப் போனேன். நல்லவேளை என் தடுமாற்றத்தை அவர் கவனிக்கவில்லை.
தற்போது பாதைகள் பழுதாகி இருப்பதால் அங்கு செல்வது
கடினமென்று சொன்னேன். வெள்ளம் வற்றி சாலைகளை பழுதுபார்க்கும் வேலைகளும்
நடந்துகொண்டிருப்பதையும் சொன்னேன்.
“சாலைகள் சரியானதும் நாம ஒரு தடவ போய் பார்த்துட்டு
வந்திருவோமா? எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுடா.”
உதவி செய்ய உதவி கேட்கும் முத்தையா வாத்தியாரிடம் என்னால்
மறுப்பு சொல்ல இயலவில்லை. பாதைகள் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதும் எங்கள்
பள்ளிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாய் உறுதியளித்து விடைபெற்றேன்.
பள்ளிக்கு போகலாம் என்று அவர் அழைத்ததும் என் நினைவுக்கு
வந்தவள் உமையாள். என்னை தடுமாற செய்ததும் அவள் நினைவுகள்தான். உமையாள்
பல்கலைகழகத்தில் என்னோடு படித்தவள். தற்போது என் முன்னாள் தமிழ்ப்பள்ளியில்
ஆசிரியராய் பணியாற்றுகிறாள்.
நட்பாக தொடங்கி நாளாக நாளாக எனக்குள் மட்டும் காதலாய்
மலர்ந்த எங்கள் உறவு, நான் காதலை சொன்னதும் முறிந்து போனது. காதலை மறுத்தவள் என்னை
விட்டு மொத்தமாய் வலகி சென்றாள். முதல் காதல் என்பதாலோ முதல் காயம் என்பதாலோ அவளை
மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் நினைப்பதை நிறுத்தவும் முடியாமல்
ஏழெட்டு வருடங்களை கடந்துவிட்டேன்.
ஏன் என்று சொல்லாமல்
நீ என்னை பிரிந்துவிட்டாய்
யார் வந்து சொன்னாலும்
உன் நினைவு பிரியவில்லை
நீ என்னை மறுத்ததற்கும்
நான் உன்னை மறப்பதற்கும்
காரணங்கள் கிடைக்கவில்லை
படிப்பு முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆனபின்னும் அவளைப் பற்றிய
தகவல்களை அவ்வபோது நண்பர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வேன். ஆனால் பார்க்கவோ பேசவோ
நினைத்ததில்லை. முடிந்து போன அந்த காதலுக்கு மீண்டும் முகவுரை எழுத நான்
விரும்பவில்லை. இப்போது மீண்டும் அவளை சந்திக்கும் நிலை வந்துவிடுமோ
என்றஞ்சுகிறேன்.
எதுவாக இருந்தாலும் என் பள்ளிகாகவும் முத்தையா
வாத்தியாருக்காகவும் நான் அங்கு செல்வது அவசியம். எத்தனையோ பொது அமைப்புகளும்
தனியார் நிறுவனங்களும் தன்னார்வாலர்களும் தங்களால் ஆனா உதவிகளை பாதிக்கப்பட்ட
மாநிலங்களுக்கு அனுப்பிய வண்ணமே இருந்தார்கள்.
என் நண்பன் மூர்த்தியிடம் தகவலை சொல்லி என்னோடு வரும்படி
அழைத்தேன்.
“நாவலா, உமையாள் இப்போ அங்கேதான் வேளை செய்யுறாங்க.
தெரியும்தானே?”
மூர்த்தி பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை என்னோடு ஒன்றாக
படித்தவன். என் காதல் கதையை நன்கு அறிந்தவன். நாங்கள் மீண்டும் சந்தித்தால்
என்னாகும் என்பதில் அவனுக்கு ஆர்வம் அதிகமாயிற்று. அவளுக்கு இன்னமும் மணமாகவில்லை
என்றும் பேசித்தான் பார் என்றும் கிண்டலாய் தொல்லை செய்யவும் தொடங்கினான். அவன்
கிண்டலை பொருட்படுத்தாமல் நாங்கள் போவதற்கான ஏற்பாடுகளை பற்றி பேசினேன்.
மூர்த்தியும் நானும் மேலும் சில நண்பர்களை தொடர்பு கொண்டு
உதவியை நாடினோம். முத்தையா வாத்தியார் அவர் நண்பர்களின் மூலம் பள்ளியின் தலைமை
ஆசிரியரை தொடர்புகொண்டு தற்போதைய நிலைமையை அறிந்து சொன்னார். இன்னும் சில
நாட்களில் பள்ளி விடுமுறை முடிந்து வகுப்புகள் தொடங்க இருப்பதால், இந்த வார
இறுதியில் அங்கு சென்று தேவையான உதவிகளை செய்ய நினைத்தோம்.
நானும் என் நண்பர்களும் எங்களால் ஆனா உதவுபொருள்களை
திரட்டிக்கொண்டு பயணத்திற்கு தயாரானோம். உதவ வேண்டும் என்ற எண்ணத்தை முத்தையா
வாத்தியார் விதைத்தார். அவர் விதைத்த எண்ணம் என்னையும் என் நண்பர்களையும் இந்த
பயணத்தில் இணைத்தது.
புறப்படும் நாளில் காலையிலேயே அனைவரும் முத்தையா வாத்தியார்
வீட்டில் ஒன்று கூடினோம். நானும் அவரும் ஒரு வாகனத்தில் போக பிற நண்பர்கள் அவரவர்
வாகனத்தில் பின்தொடர்ந்தனர். போகும் வழியில் மாணிக் ஊராய் என்ற இடத்தில் நிறுத்தும்படி
கேட்டுக்கொண்டார். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் மாணிக் ஊராயும்
ஒன்று. அங்கு இருக்கும் தன் நண்பர்களை காண வேண்டுமென்று சொன்னார்.
கட்டாயம் செல்வதாய் உறுதியளித்தேன். எங்களின் இந்த பயணமே
அவருக்காகத்தான். அவர் இந்த உதவியை என்னிடம் கேட்டதை பெருமையாய் நினைக்கிறேன்.
தலைநகரிலிருந்து கிளந்தான் சென்றடைய ஐந்து மணி நேரத்துக்கு
மேலாகும். நாங்கள் எங்கள் பயனத்தை மெதுவாகவே தொடர்ந்தோம். சாலைகளில் மீட்புப்பனிக்காக
செல்லும் நிறைய வாகனக்கள் தொடரணியாக செல்வதை கண்டோம். ஒட்டு மொத்த தேசமும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகொடுக்க ஒன்றிணைந்தது உள்ளது. நாட்டில் சின்ன சின்ன
வேறுபாடுகளையும் மிஞ்சி ஒற்றுமை மேலோங்கி இருப்பதை இவர்களின் இந்த பயணம் உறுதிபடுத்தியது.
இதில் நாங்களும் ஒரு பங்காக இருப்பதில் பெருமை கொண்டோம்.
முத்தையா வாத்தியார் பள்ளியைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி
கிடக்க எங்கள் பயணம் மௌனமாகவே தொடர்ந்தது. என் கைப்பேசிக்கு வந்த ஒரு அழைப்பு
எங்கள் மௌனத்தை உடைத்தது.
அழைத்தது உமையாள்.
“வணக்கம். நான் பாசிர் காஜா தமிழ்ப்பள்ளியிளிருந்து
பேசறேன். முத்தையா சார் மீட்டுப்பணி தொடர்பா இந்த எண்ணுக்கு அழைக்க சொன்னாரு.”
உமையாள் நானென்று தெரியாமல்தான் என் எண்ணுக்கு
அழைத்திருக்கிறாள். நான் மட்டும்தான் கிறுக்கன் போல அவள் எண்ணையும் மறவாமல்
எண்ணங்களையும் மறவாமல் இருக்கிறேன் போல.
“சொல்லுங்க டீச்சர்.”
நானும் யாரோ ஒருவன் போல் பேசினேன். உண்மை சொன்னால் அவள்
பார்வையில் நான் யாரோ ஒருவன் தானே. பாதைகள் இன்னமும் பழுதாக இருப்பதால்
மாற்றுப்பாதை பயன்படுத்தி வரச்சொன்னாள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு
பொருட்களும் குழந்தைக்கான மருந்தும் உணவும் அதிகமாக தேவைப்படுவதை சொன்னாள்.
நாங்கள் தேவையான உதவிப் பொருட்களோடு வருவதை சொன்னேன். வரும் வழியில் மேலும் சில
பொருட்களை வாங்கி வருவதாய் உறுதியளித்தேன். எங்கள் உதவிக்கு நன்றி சொல்லி
விடைசொன்னாள்.
முத்தையா வாத்தியாரிடம் விவரத்தை சொன்னேன். தொடர்புக்கு என்
எண்ணை அவர்தான் கொடுத்ததாய் சொன்னார். அழைத்தது யாரென்று கேட்டார். யாரென்று
சொல்வது.
“தெரியல ஐயா. பள்ளி ஆசிரியைனு நினைக்கிறேன்.”
அவளை யாரென்று சொல்வதென்று தெரியவில்லை. யாரோ என்று சொல்லி
மௌனமாய் பயணம் தொடர்ந்தேன். முத்தையா வாத்தியார் பள்ளியை பற்றியும் பள்ளி
நினைவுகளை பற்றியும் பேசிக்கொண்டே வந்தார். அவர் மனைவியை பற்றியும் சொன்னார். அவர்
மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். திருமணத்திற்கு முன்னரே அவரின் உடல்நிலை
பற்றி அறிந்தும் அவர் கைவிடவில்லை. காதலின் கண்ணுக்கு நோயெல்லாம் தெரியுமா என்ன?
திருமணம் முடிந்ததும் தன் மனைவியின் சொந்த ஊரான குவாலா கூறாய்-க்கு மாற்றலாகி
வந்தார். இரண்டு வருடங்களில் அவர் மனைவியும் இறந்துவிட்டார். மனைவியின் நினைவாக
முத்தையா வாத்தியார் அங்கேயே இருந்துவிட்டார். கடந்த சில வருடத்துக்கு முன் தான்
தலைநகருக்கு மாற்றலாகி வந்துள்ளார்.
முத்தையா வாத்தியாருக்கு பிள்ளைகளும் இல்லை. பிள்ளைகள்
வேண்டாமென்பது அவர் மனைவியின் வேண்டுகோள். அவர் மறுமணம் செய்யவேண்டுமென்று தன்
மனைவி கேட்டுக்கொண்டதாகவும் சொன்னார். ஏன் செய்யவில்லை என்று நான் கேட்கவில்லை.
மனைவியின் மறைவுக்கு பிறகு அவர் தாலியை கழுத்தில் அணிந்து அவர் நினைவாகவே
வாழ்ந்துகொண்டிருக்கும் கணவனிடம் அந்த கேள்வியை கேட்பதே தவறு.
“நீங்க அவங்களோடு வாழ்ந்தது கொஞ்ச காலம் என்றாலும் அந்த
உறவுக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்கறிங்க. இந்த காலத்தில் இப்படி யாரையும் பார்ப்பது
கடினம் ஐயா.”
குறட்டை சட்டத்துக்கே கோர்ட்டுக்கு போகும் இந்த காலத்தில்
இல்லற வாழ்வுக்கு அவ்வளவு மதிப்பளிக்கும் முத்தையா வாத்தியாரை நினைத்து பெருமிதம்
கொண்டேன்.
“கொஞ்ச காலமா? யாருடா சொன்னது?”
முத்தையா வாத்தியார் கேட்டதில் தடுமாறினேன். ஏதோ தவறாக
சொல்லிவிட்டேனோ என்று பயந்து போனேன்.
“காதலிச்சது நாலு வருஷம். மணவாழ்வு இரண்டு வருஷம், மனதோடு
வாழ்வது முப்பது வருஷம்டா.”
அவரின் வார்த்தைகள் முள்ளாய் தைத்தது. மாறாத காதல் இன்னும்
மண்மீது இருக்கத்தான் செய்கிறது. முத்தையா வாத்தியாரின் காதலைப் போல ஏன் காதலும்
வாழுமா என்று எனக்கே தெரியவில்லை.
முத்தையா வாத்தியார் கண்மூடி சிந்தனையில் மூழ்கிப்போனார்.
மேலும் உரையாடலை தொடர வேண்டாமென்று நானும் மௌனமாக பயணத்தை தொடர்ந்தேன். மானிக்
ஊராய் பகுதியை நெருங்க நெருங்க வெள்ளாத்தால் ஆன சேதங்களை அதிகம் காண முடிந்தது.
சாலைகளும் மோசமான நிலையில் தான் இருந்தது. ஒரு வழியாக முத்தையா வாத்தியாரின்
நண்பர்கள் இருக்கும் பகுதியை சென்றடைந்தோம்.
ஏதோ யுத்தம் நடந்த பூமி போல மொத்தமாய் சேதமாகிக் கிடந்தது
அந்த இடம். வீட்டுக்குள் வெள்ளம் புகுத்த கதையைத்தான் நான் கேட்டதுண்டு. இங்கு
வீடே வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போன நிலையை பார்த்து கலங்கிப் போனேன்.
முத்தையா வாத்தியார் தன் நண்பர்களை சந்தித்தார். அவர்களும்
சில தன்னார்வாலர்களும் தற்காலிக கூடாரம் அமைக்கும் பணியில் இருந்தார்கள்.
“ஐயா, பள்ளி தொடங்க இன்னும் இரண்டு நாள் இருக்கு. இங்க
இவர்களுக்கு கொஞ்சம் உதவி செய்துட்டு பிறகு போகலாமா?”
வீடே இல்லாமல் தவித்திருக்கும் இவர்களுக்கு சிறு உதவியாவது
செய்ய வேண்டுமென்று துடித்தது என் மனது. முத்தையா வாத்தியாரும் என் நண்பர்களும்
கூட அதுவே தங்கள் விருப்பமென்றார்கள். நாங்களும் அவர்களோடு சேர்ந்து வேலைகளைப்
பார்த்தோம்.
அந்த வேளையில் ஒரு மழலை சிறுவன் எங்களருகே வந்து “சுசு
அடா?” என்று கேட்டான். அரசாங்கம் நிறைய உதவிப்பொருட்களை அனுப்பிய வண்ணமே
இருந்தாலும் இன்னமும் உணவுப்பொருட்கள் பற்றாகுறையாகத்தான் இருப்பதாக முத்தையா
வாத்தியாரின் நண்பர் சொன்னார். அதனால் வருகின்ற தன்னார்வாளர்கள் ஏதேனும் கொண்டு
வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் சிறுவர்கள் கேட்கிறார்கள் என்றும் சொன்னார்.
அவர் சொன்னதைக்கேட்டு மனம் தாங்கவில்லை. பெரியவர்கள்
சூழ்நிலை அறிந்து பசியையும் பொறுத்துக்கொள்வார்கள். இந்த மழலைகள் என்ன
செய்வார்கள்? எங்களிடமிருந்த பொருட்களை அவர்களிடம் கொடுக்கத்தொடங்கினோம். அந்த
மழலைகள் முகத்தில் கண்ட மகிழ்ச்சியில் கடவுளைக் கண்ட திருப்தி அடைந்தோம்.
இரவு பத்து மணிக்கு எங்கள் பள்ளிக்கூடம் நோக்கி
புறப்பட்டோம். ஒரு மணி நேரத்தில் பாசிர் காஜா சென்றடைந்தோம். முத்தையா
வாத்தியாரின் நம்பர் நாங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார்.
உறங்குவதற்கு முன் நானும் முத்தையா வாத்தியாரும் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம்.
“எல்லா பொருட்களையுமே அங்கேயே கொடுத்துட்டு வந்துட்டோமே?
இவர்களுக்கு கொடுக்க எதுவுமே இல்லையே?”
முத்தையா வாத்தியார் கேட்டது உமையாள் சொன்னதையும் நினைவு
படுத்தியது. இங்கேயும் அதே நிலைமைதானே. கண்டிப்பாக ஏதாவது ஏற்பாடு செய்யலாம் என்று
உறுதியளித்தேன். உதவ வேண்டுமென்ற எங்கள் எண்ணமே ஏதேனும் வழிகாட்டும் என்ற
நம்பிக்கையில் உறங்கினேன்.
மறுநாள் அனைவரும் பள்ளியை நோக்கி சென்றோம். பள்ளியின்
கட்டிடங்களில் பெருமளவு பாதிப்புகள் இல்லையென்றாலும் நிறையவே துப்புறவு பணிகள்
செய்யவேண்டியது இருந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலர் தற்காலிகமாக பள்ளியை
ஒட்டியுள்ள ஆசிரியர் விடுதியில் தங்கியிருந்தனர். முத்தையா வாத்தியார் பள்ளியின்
தலைமை ஆசிரியர் திருமதி மீரா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். என் நண்பர்கள்
பள்ளியின் சூழலை பார்த்துக்கொண்டிருந்தனர். என் விழிகள் மட்டும் அவளைத் தேடிக்கொண்டிருந்தது.
உமையாளும் பள்ளியில் தான் இருந்தாள். நூலகத்தை சுத்தம்
செய்யும் பணியில் இருந்தாள். எத்தனையோ ஆண்டுகள் கழித்து மீண்டும் அவளை
பார்க்கிறேன். அவள் கொஞ்சமும் மாறவில்லை. அன்று மாணவியாய் இருந்தவள் இன்று
ஆசிரியையாய் இருக்கிறாள். மூர்த்தி அவளிடம் சென்று பேசினான். தூரத்தில் நிற்கும்
என்னையும் காட்டினான். அவள் என்னை பார்க்கையில் அவள் முகத்தில் மகிழ்ச்சியோ
ஆச்சரியமோ இல்லை. வெறுமையான சில நொடி பார்வை, மெல்லிய புன்னகையோடு
திரும்பிக்கொண்டாள்.
தலைமை ஆசிரியரிடம் தேவையான பொருட்கள் வாங்க அருகில்
இருக்கும் ஏதேனும் இடத்திற்கு போகவேண்டுமேன்றேன். வெள்ளத்தில் பாதிக்கப்படாத
இடமேதும் இருக்குமா என்றும் கேட்டேன்.
“கொஞ்ச தூரம் போகவேண்டியது இருக்கும். நீங்க உமையாள்
டீச்சரை கூட்டிகிட்டு போங்க. அவங்களுக்கு பாதை தெரியும்”
அவர் சொன்னதை கேட்டு நான் எதுவும் சொல்லும் முன்னரே
முத்தையா வாத்தியார் பேசத்தொடங்கினார்.
“சரி நாவலா, நீ அவங்களோடு போய் தேவையான பொருட்களை
வாங்கிட்டு வந்திரு. நாங்க இங்க உள்ள வேலைகளை பார்க்கிறோம்.”
தலைமை ஆசிரியர் உமையாளை சந்திக்க சென்றார். அவள் வருவாளா
என்ற சந்தேகம் இருந்தது. கட்டாயம் வருவாள் என்ற நம்பிக்கையும் இருந்தது. சேவைகள்
செய்வதில் அவள் என்னையும் மிஞ்சியவள்.
“நான் மற்றவங்கள் மாறி இல்ல. எனக்கு நிறைய கடைமைகளும்
இலட்சியங்களும் இருக்கு. காதலுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்ல.”
என் காதலை மறுத்தபோது அவள் சொன்ன வார்த்தைகள் இது.
தோட்டப்புறத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணின் மனதில் இருந்து வந்த வார்த்தைகள்
அவை.
முத்தையா வாத்தியாரும் என் நண்பர்களும் பள்ளியை சுத்தம்
செய்யும் வேலைகளைத் தொடங்கினர். நான் பொருட்களை வாங்க போவதற்கு தயாரானேன்.
உமையாளும் வந்தாள். தனிமையில் தொலைதூர பயணம் போவது என் ஒரே பொழுதுபோக்கு. அதுவும்
பாடல்கள் கேட்ட வண்ணமே பயணிப்பதில் ஒரு தனி சுகம். அப்படி எத்தனையோ பயணங்கள்
பாடல்களோடும் அவள் நினைவுகளோடும் நான் கடந்ததுண்டு. முதல் முறையாய் அவளோடு ஒரு
பயணம்.
எங்களின் பயணத்தில் மௌனம் மட்டுமே நிறைந்திருந்தது. அவள்
வலது இடது என்று வழி சொல்வதைத் தவிர வேறெதுவும் பேசவில்லை. நானும் அவளிடம் எதுவும்
கேட்கவில்லை. அந்த மௌனமான பயணம் எனக்கு பிடித்திருந்தது.
நீயில்லாமலே முடிந்தது
எத்தனையோ காலம்.
உன்னை நினைக்காமல் முடிந்ததில்லை
எந்த ஒரு நாளும்.
மௌனமான இந்த
பயணம் போதும் பெண்ணே...
நீயிருக்கும் இந்த
நொடிகள் போதும் கண்ணே
இன்னும் நூறாண்டு காலம்
என் நாட்கள் நகரும்
இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு வெள்ளத்தில்
பாதிக்கப்படாத பகுதியை அடைந்தோம். தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கினோம்.
தேவைக்கு அதிகமான அளவில்தான் எல்லா பொருட்களையும் வாங்கினேன்.
“இது போதும்னு நினைக்கிறேன்.”
கடைசியாய் சில வார்த்தைகள் பேசத்தொடங்கினாள்.
“பரவால இருக்கட்டும். மறுபடியும் இவ்வளவு தூரம் வருவது கடினமாச்சே.”
நான் சொன்ன பதிலுக்கு ஒரு புன்னகை பதிலாய் கிடைத்தது.
வெள்ளத்தால் வீடு, உடைமைகள், வாகனங்கள் என்று எல்லாத்தையும் இழந்தவர்கள் எப்படி
இவ்வளவு தூரம் வருவார்கள். அவர்களின் தேவைக்கு அதிகமாகவே பொருட்கள் வாங்கி கொடுக்க
நினைத்தேன்.
பொருட்கள் வாங்கி முடித்து மீண்டும் பள்ளியை நோக்கி
பயணித்தோம். மீண்டும் ஒரு மௌனமான பயணம். பொழுது சாய்வதற்குள் பள்ளியை
சென்றடைந்தோம். முத்தையா வாத்தியாரும் என் நண்பர்களும் வேலைகளை முடித்து
அமர்ந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் அசதியை கண்டேன்.
நானும் உமையாளும் சேர்ந்து நடந்து வருவதைப் பார்த்த
மூர்த்தி சிரித்தான். அவனுடைய கிண்டலான சிரிப்பைப் கண்டும் காணாதவன் போல முத்தையா
வாத்தியாரிடம் சென்றேன். வேலைகள் இன்னும் நிறைய இருப்பதாகவும் நாளை முடிந்த அளவு
செய்து முடிக்க வேண்டுமென்றும் சொன்னார்.
“நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கு. திங்கட்கிழமை வகுப்பு
தொடங்கிரும். நாளைக்கே முடிந்த அளவு செய்து முடிக்கனும்டா.”
முத்தையா வாத்தியார் தன் நண்பர்கள் சிலரை உதவிக்கு
அழைத்ததாகவும் சொன்னார். இரவு உணவுக்கு பிறகு நாங்கள் தங்கும் இடத்துக்கு
சென்றோம். மறுநாள் காலையிலேயே அனைவரும் பள்ளிக்கு சென்றடைந்தோம். உமையாளும் தலைமை
ஆசிரியரும் எங்களுக்கு முன்னரே பள்ளியில் இருந்தார்கள். வேலைகளை தொடங்கும் முன்
இன்று செய்யவேண்டிய வேலைகளைப் பற்றி தலைமை ஆசிரியரிடம் பேசினோம்.
அந்த வேளையில் உமையாள் முத்தையா வாத்தியாருக்கு தேநீர்
கொண்டு வந்தாள். அவர் அருகில் அமர்ந்திருந்த எனக்கு தேநீரும் கிடைக்கவில்லை அவளின்
தேன்வழியும் பார்வையும் கிடைக்கவில்லை. அழுத்தக்காரி என்னை ஏறெடுத்தும்
பார்க்காமல் சென்றாள்.
நானும் என் நண்பர்களும் வெள்ளத்தால் சேறாகி கிடக்கும்
வகுப்பறைகளை சுத்தம் செய்ய தொடங்கினோம். பள்ளி ஆசிரியர்களும் எங்களோடு சேர்ந்து
உதவினார்கள். நாங்கள் அத்தனை பேர் சேர்ந்து செய்தாலும் வேலைகள் ஓய்ந்ததாக இல்லை.
ஒவ்வொருவர் முகமும் சோர்வடைய தொடங்கியது.
அந்த வேளையில் முத்தையா வாத்தியாரின் நண்பர்கள் வந்து
சேர்ந்தனர். அவர்களின் இருப்பிடம் பள்ளியில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம்
இருக்கும். அவர்களும் வெள்ளத்தில் வீட்டையும் வாகனத்தையும் இழந்தவர்கள் தான்.
இவ்வளவு தூரம் நடந்தே வந்திருக்கிறார்கள். இனம் மொழி என்ற வேறுபாடுகள் பார்க்காமல்
தங்கள் துயரங்களை மறந்து எங்களுக்கு கைகொடுக்க திரண்ட அவர்களைப் பார்த்து
வியந்தேன். நண்பர்கள் வருவார்கள் என்று முத்தையா வாத்தியார் சொன்னபோது இவ்வளவு
பெரிய கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை.
“இந்த கிழவனுக்கு இவ்வளவு நண்பர்கலானு பார்க்கறியா?”
நான் மனசுக்குள் வியந்ததை முத்தையா வாத்தியார் எப்படியோ
அறிந்து கொண்டார்.
“எல்லாம் நாம பழகுற பழக்கத்தில் இருக்கு. நாம் எதை
விதைக்குரோமோ கண்டிப்பா அதைத்தான் அறுவடை செய்வோம்.”
தனக்காக திரண்ட நண்பர்கள் கூட்டத்தைப் பார்த்து முத்தையா
வாத்தியாரே கண்கலங்கி போனார். தான் விதைத்த நல்ல விஷயங்கள் தான் இத்தனை உறவுகளும்
என்று பெருமையாக சொன்னார்.
சிறிது நேர உரையாடலுக்கு பிறகு மீண்டும் வேலைகளைத்
தொடங்கினோம். உதவும் கரங்கள் அதிகரித்ததால் வேலைகள் வேகமாக நடக்க தொடங்கின. எங்கள்
முகத்தில் சோர்வு மறைந்து உற்சாகம் அதிகரித்தது.
வீட்டையும் உடமைகளையும் இழந்திருந்தாலும் இவர்கள் தான்
உண்டு தங்கள் தேவைகள் உண்டு என்றில்லாமல் உதவ முன் வந்துள்ளனர். எல்லோரும் சிரித்த
முகத்தோடு வேலைகள் செய்கிறார்கள். இங்கே யாரும் வேற்றுமைகள் பார்க்கவில்லை. இனமோ
மதமோ என்ற வேறுபாடுகள் பேசவில்லை. உதவ வேண்டும் என்ற எண்ணம், ஒரு நண்பனின் அழைப்பு
இங்கே இவர்களை ஒன்று சேர்த்துள்ளது.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்று இந்த பள்ளிக்கூடத்தில்
தான் படித்தேன். இன்று இதே பள்ளிகூடத்தில் அதை நேரில் பார்க்கிறேன்.
இரவு ஒன்பது மணி போல வேலைகள் முடிய தொடங்கியது. வெள்ளத்தால்
ஏற்பட்ட சேதங்கள் மறைந்து பள்ளிகூடம் இயல்பான தோற்றத்துக்கு வந்திருந்தது.
எல்லோரின் முகத்திலும் மகிழ்ச்சியை பார்த்தேன். உமையாள் முகத்தில் மகிழ்ச்சியும்
உற்சாகமும் கலந்திருந்தது. முகத்தில் இருந்த சோர்வு நீங்கி இப்போது துறு
துறுவென்று இருக்கிறாள். அதற்க்கு காரணம் நாளை வகுப்பு தொடங்க இருப்பதும் அதற்க்கு
முன் பள்ளியை சுத்தம் செய்யும் வேலைகள் முடிந்ததும் தான்.
முத்தையா வாத்தியார் நண்பர்களோடு சிறிது நேரம் பேச
விரும்பினார். அனைவரும் பள்ளிக்கூடத்திலேயே அமர்ந்து வெகு நேரம்
பேசிக்கொண்டிருந்தோம். மற்றவர்கள் அவரவர் இருப்பிடத்துக்கு சென்று விட்டனர்.
நள்ளிரவு பண்ணிரண்ட்டுக்கு மேல் தான் நானும் முத்தையா வாத்தியாரும் வீடு சென்றோம்.
“நாளைக்கு காலையில வகுப்புகள் ஆரம்பிச்சதும் கொஞ்ச நேரம்
பார்த்துட்டு கிளம்பிரலாம். பார்த்து ரொம்ப நாள் ஆச்சிடா.”
முத்தையா வாத்தியார் போலவே எனக்கும் ஆசைதான். திங்கட்கிழமை
பேரவை, வாய்ப்பாடு சொல்லும் மாணவர்கள், காலை ஒன்பது மணி சிற்றுண்டி, ஓடி விளையாடிய
திடல், ஆசிரியரிடம் குட்டு பட்ட நாட்களென்று எத்தனை நினைவுகள் இன்னமும் பசுமையாகவே
இருக்கிறது. அவரிடம் சம்மதம் சொல்லி நானும் உறங்க சென்றேன்.
மறுநாள் காலையிலேயே நாங்கள் பள்ளிகூடம் சென்றடைந்தோம்.
மாணவர்களும் பெற்றோர்களும் வந்த வண்ணமாகவே இருந்தனர். வெள்ளத்தில் உடமைகளை இழந்த
மாணவர்கள் நிறைய பேர் பள்ளி சீருடை இல்லாமல் வந்திருந்தனர். ஆசிரியர்கள் மாணவர்கள்
பதிவு வேலைகளை பார்த்துகொண்டிருந்தனர்.
நாங்கள் அனைவரும் விடைபெற தயாரானோம். முத்தையா வாத்தியார்
தலைமை ஆசிரியாரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் வகுப்பறையில் இருந்த உமையாளை
சந்திக்க சென்றேன். ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் அவளிடம் விடைபெற்று வர போனேன்.
“சரி டீச்சர். நாங்க கிளம்பறோம். நூலகத்தில் நிறைய புத்தகம்
வெள்ளத்தில் வீனா போச்சி. நாங்க கொஞ்சம் புத்தகம் வாங்கி அனுப்பி வைக்கறோம்.”
நான் சொன்னதை கேட்டு புன்னகைத்தாள். அந்த புன்னகை
எதற்கென்று தெரியவில்லை.
“ரொம்ப நன்றி. உமையாள் என்றே கூப்பிடலாம்.”
அவள் சொன்னது நான் எதிர்பாராத ஒன்றுதான். மீண்டும்
புன்னகைத்தாள். அவள் கண்களில் காதல் இல்லை. நன்றியும் நட்பும் மரியாதையும்
இருந்தது. நானும் புன்னகைத்து விடைபெற்றேன். இது போதும் எனக்கென்று இதயம் துள்ளி
குதித்தது. அந்த இனம் புரியா உணர்வுக்கு என்ன பெயரென்று தெரியவில்லை.
பள்ளியின் நுழைவாயிலில் என் நண்பர்களும் முத்தையா
வாத்தியாரும் காத்திருந்தார்கள். நான் எதிர்பார்த்தது போலவே மூர்த்தி தன் கிண்டலான
புன்னகையோடு காத்திருந்தான்.
புறப்படலாமா என்று சொன்னபோது முத்தையா வாத்தியார் நாங்கள்
எதிர்பாராத விண்ணப்பத்தை வைத்தார்.
“பக்கத்துல ஒரு மலாய் பள்ளியில துப்புரவு பணிகள்
நடந்துகிட்டு இருக்காம். போய் ஏதேனும் உதவி செய்ய முடியுமான்னு பார்க்கலாமா?”
அவர் சொன்னதை கேட்டு என் நண்பர்களைப் பார்த்தேன். அத்தனை
பேரும் சம்மதம் சொல்லும் வகையில் சிரித்தனர். நானும் சரியென்று சொல்லி
புறப்பட்டேன்.
எங்கள் யாருக்கும் சோர்வு தெரியவில்லை. முத்தையா
வாத்தியாரின் எண்ணங்கள் எங்களின் பலமாக இருந்தது. இது நாங்கள் விதைக்கின்ற நேரம்.
நாளைய அறுவடை காலம் நல்லதாய் அமைய இது நாங்கள் நல்லதை விதைக்கும் நேரம்.
No comments:
Post a Comment