“ஆறு, ஏழு , எட்டு”
குமார் சிறைசாலை கம்பிகளை
கடைசியாய் ஒரு முறை எண்ணி முடித்தான். நாளை காலை அவனுக்கு விடுதலை. போதை பொருள்
வைத்திருந்த குற்றத்திற்காக கைதாகி சில ஆண்டுகளாய் இந்த இரும்பு கம்பிகளுக்குள்
அடைபட்டு அவன் அனுபவித்த தண்டனை காலம் இன்றோடு முடிகிறது.
இந்த சிறைசாலையில் ஒவ்வொரு
நொடியையும் குமார் தன் தாயை நினைத்தபடிதான் கடந்திருக்கிறான். அவன் வீட்டுக்கு ஒரே
பிள்ளை, சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன். அவன் தாய் செல்லம்மா, வீட்டு வேலைகள்
செய்து அதில் வரும் வருமானத்தில்தான் அவனை வளர்த்தார். செல்லம்மா குமாரின் மீது
பெரிய நம்பிக்கையும் கனவுகளும் வைத்திருந்தார். ஆனால் வாழ்க்கை அவனை வேறு வழியில்
கொண்டுசென்று விட்டது.
தாயின் பேச்சை மதிக்காமல்
அவன் சேர்ந்த தீய நட்பும் அவன் செய்த சட்டத்திற்கு புறம்பான காரியங்களும் இன்று
அவனை இந்த நிலையில் கொண்டு சேர்த்து விட்டது. குமார் பிடிபட்டபோது அவன் தாய் காவல்
துறையினரின் காலை பிடித்து கதறியதை எண்ணி இன்னமும் அவன் கலங்குவது உண்டு. குமார்
மனதுக்குள்ளேயே அவன் தாயிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்வதுண்டு.
“அம்மா, என்ன
மன்னிச்சிருங்கம்மா. நான் உங்களுக்கு ஒரு நல்ல பிள்ளையாவே இருந்ததில்ல.” தாயின் கண்ணீருக்கு தான் காரணமாகிவிட்டதை எண்ணி
குமார் பலமுறை அழுது புலம்பியது அந்த இரும்பு கம்பிகளுக்கு மட்டுமே தெரியும்.
பொழுது விடிந்ததும்
விடுதலைக்கான செயல்முறைகள் எல்லாம் முடிந்த பின்னர் குமார் சிறைச்சாலையை விட்டு
வெளியேறினான். அவனை வரவேற்க அவன் மாமா மட்டுமே வந்திருந்தார், செல்லம்மா வரவில்லை.
குமார் செல்லம்மாவை சிறைச்சாலைக்கு வர வேண்டாமென்று சொல்லியிருப்பதால் அவன்
பிறந்தநாளை தவிர பிற தினங்களில் செல்லம்மா அவனை பார்க்க வருவதில்லை. தன்னை கைதியாய்
பார்த்து செல்லம்மா கதறி அழுவதை தாங்க முடியாமல் தான் குமார் அவ்வாறு சொன்னனான்.
வீட்டுக்கு போகும் வழியில் குமாரின் மாமா அவன் தாயின் நிலவரங்களை பற்றி நிறையவே
எடுத்து சொன்னார்.
“செல்லம்மாவுக்கு
வயசாச்சிடா. முன்ன மாறி இல்ல. இன்னமும் வீட்டு வேலை செஞ்சிகிட்டு காலத்தை
தள்ளிகிட்டு இருக்கு. எல்லாம் உனக்காகத்தான்.”
போன வருடம் செல்லம்மாவுக்கு
மாரடைப்பு வந்ததையும் இப்போதெல்லாம் அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போவதையும் அவர்
சொன்னபோது குமார் குற்ற உணர்வில் குறுகி போனான்.
“ஞாயமா பார்த்தா நீ உட்கார
வச்சி சோறு போடணும். அவள் என்னன்னா இன்னமும் உனக்காக சம்பாரிச்சிகிட்டு இருக்கா.
இனிமேலாவது பார்த்து நடந்துக்குடா.”
குமாரின் மாமா பேசுவது
நெஞ்சை தைக்கும்படி இருந்தபோதும் குமார் மௌனமாகவே இருந்தான். தங்கை மேல் உள்ள
பாசத்தில் அவர் பேசுகிறார். ஒரு மகனாய் தன் தாய்க்கு இத்தனை துயர் கொடுத்து
விட்டோமே என்ற குற்ற உணர்வில் குமார் மௌனமாகவே வந்தான். கண்ணீரை அடக்கிக்கொண்டு
தன் தாயை நினைத்தபடியே இருந்தான்.
“அம்மா, என்ன
மன்னிச்சிருங்கம்மா. என்னால உங்களுக்கு எவ்வளவு துன்பம்.”
வீடு சேர்ந்ததும் அக்கம்
பக்கம் பல கண்கள் தன்னை பார்ப்பதை குமார் உணர்ந்தான். அவர்களின் பார்வையின்
அர்த்தம் என்னவோ என்று நிமிர்ந்து பார்க்கணும் துணிவில்லாமல் கூனி குறுகியபடியே
வீட்டுக்குள் போனான். அவன் வருவதை பார்த்த செல்லம்மா ஓடி வந்து அவனை கட்டியணைத்து அழுதார்.
ஊர் என்ன சொன்னலும் நினைத்தாலும் எந்த ஒரு தாயும் தன் பிள்ளையை குறைவாக
நினைக்கப்போவதில்லை. இத்தனை நடந்ததற்கு பிறகும் தன் தாய் தன் மேல் இத்தனை பாசம்
வைத்திருப்பதை எண்ணி குமார் கலங்கிப்போனான்.
குமார் தன் தாயின் காலில்
விழுந்து மன்னிப்பு கேட்க துடித்தான். சிறைச்சாலையில் அந்த இரும்பு கம்பிகளுக்கு
முன்னே எத்தனையோ முறை தன் தாயிடம் மன்னிப்பு கேட்டு கதறி அழுததுண்டு. ஆனால் இன்று
தன் தாயின் முன் நின்று பேச முடியாமல் தடுமாறி நின்றான்.
“அம்மா, என்ன
மன்னிச்சிருங்கம்மா. என்னால நீங்கே ரொம்ப கஷ்ட்டபட்டுட்டிங்க. நான்...” குமார் பேசி முடிக்கும் முன்னரே செல்லம்மா
குறுக்கிட்டார்.
“அம்மாதானடா. அதெல்லாம் ஒன்னும்
இல்ல. நீ பேசாம இரு.”
குமார் நடந்ததை பற்றி நினைக்கதபடியே
செல்லம்மா குமாரை பார்த்துக்கொண்டார். தாயின் அரவணைப்பில் குமாரும் கொஞ்ச கொஞ்சமாக
இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினான்.
குமார் இயல்பான
வாழ்க்கைக்கு திரும்பினாலும் அவனுடைய கடந்தகாலத்து கரைகள் அவனை விட்டு நீங்கிய
பாடில்லை. சிறைச்சாலைக்கு போனவன் என்ற அடையாளம் அவனுக்கு வேலை கிடைக்கவும் தடையாக
இருந்தது.
அவனை பார்த்து நலம்
விசாரிப்பவர்களை விட சிறைச்சாலை வாழ்க்கை எப்படி இருந்ததென்று கேட்பவர்கள் தான் அதிகமாக
இருந்தனர். ஒவ்வொரு முறையும் வெளி உலகம் அவனுக்கு கடந்தகால வாழ்க்கையை
நினைவுபடுத்தும் போது மீண்டும் குற்றவாளி கூண்டுக்குள் நிற்பதை போலவே உணர்ந்தான்.
வேலையில்லாமல் வீட்டில்
இருப்பதை குமார் ரணமாக உணர தொடங்கினான். வயதான காலத்தில் இன்னமும் செல்லம்மா வேலை
செய்வதை குமாரால் பார்க்க இயலவில்லை. தன் இயலாமையை நினைத்து வருந்தினான்.
“அம்மா, இந்த வயசுலயும்
நான் உங்களுக்கு பாரமா இருக்கிறேனே அம்மா.”
குமார் தாயிடம் தன்
மனக்குமுறலை சொன்னான். எந்த சூழ்நிலையிலும் செல்லம்மா அவனை பாரமாக நினைக்க
மாட்டாள் என்று குமாருக்கும் தெரியும்.
“அம்மாதானடா. அதெல்லாம்
ஒன்னும் இல்ல.”
“குமாரு, பேசாம நீ ஏதாவது
படிக்க வேண்டியது தானே. உன்ன இந்த ஊரு படிக்குற பையனா பார்க்க ஆரம்பிச்சிட்டா பழசை
எல்லாம் மறந்துருவாங்கப்பா.”
செல்லம்மா பள்ளிக்கூடம்
பக்கம் கூட போனதில்லை. ஆனால் அவருக்கு படிப்பின் மேல் அப்படி ஒரு ஆசை. குமார்
படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற ஆசை அவரை விட்டு இன்னமும் போகவில்லை. அவர்
வார்த்தையில் உள்ள உண்மையை குமாரும் உணர்ந்தான்.
தன் பழைய ஆசிரியரை
சந்தித்து தன் நிலைமையையும் விருப்பத்தையும் சொல்லி அவரின் உதவியோடு படிக்கத்
தொடங்கினான். படிப்பு செலவுக்கு கிடைத்த வேலைகளை செய்துகொண்டு அந்த வருமானத்தில் படிப்பு
செலவையும் பார்த்துக்கொண்டு செல்லம்மாவுக்கு உதவியாகவும் இருந்தான். எப்படியாவது
இளங்கலை பட்டம் பெறுவதை தன் லட்சியமாக கொண்டான். குமாரை பொருத்தவரைக்கும் அது
எட்டாத உயரம் தான். ஆனாலும் செல்லம்மாவின் பாசம் அவனை அந்த உயரத்தையும் தொட வைக்கும்.
இப்போதெல்லாம் அவனை
பார்ப்பவர்கள் படிப்பு எப்படி இருக்கிறதென்று கேட்கிறார்கள். அவனுக்கு நிரந்தர
வேலையும் கிடைத்திருக்கிறது. செல்லம்மா சொன்னதுபோல அவனுடைய கடந்தகாலத்து கரையை
கல்வி துடைத்துவிட்டது.
சில ஆண்டுகளில் குமாரின்
படிப்பு நிறைவடைந்தது. பட்டமளிப்பு வந்தது.
பட்டமளிப்புக்கு போகும் முன் குமார் செல்லம்மாவின் காலை தொட்டு வணங்கினான்.
“ரொம்ப நன்றிம்மா. உங்களால
தான் இதெல்லாம்.”
அதை சற்றும் எதிர்பாராத
செல்லம்மா தடுமாறி போனார்.
“அம்மாதானடா. நீ நல்லா இருந்தா
எனக்கு தானே சந்தோசம்.”
பட்டமளிப்பு விழாவில் தன்
இருக்கையில் அமர்ந்தபடியே குமார் பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த
செல்லம்மாவை பார்த்தான். அவன் கைதாகி போகும்போது கதறியழுத அம்மா இன்று ஆனந்த
கண்ணீரோடு அமர்ந்திருப்பதை பார்த்து பெருமிதம் கொண்டான். எதையோ சாதித்த
திருப்தியில் மெய்மறந்து போனான்.
“தம்பி... தம்பி..”
யாரோ அழைக்கும் குரல்
கேட்டு குமார் எழுந்தான். அழைத்தது சிறைச்சாலையின் காவல் அதிகாரி திரு. கணபதி. குமார்
இன்னமும் சிறை கம்பிகளுக்கு பின்னால் இருப்பதை உணர்ந்தான். சிறையை விட்டு வெளியே
போனதும் வாழ்ந்ததும் வெறும் கனவு என்பதை உணர்ந்தான்.
“தம்பி, நேரமாச்சிப்பா.
எழுந்திரி.”
கணபதி நேரமாகிவிட்டது என்று
சொன்னது விடுதலைக்கு அல்ல. மரணதண்டனைக்கு. போதைப்பொருள் வைத்திருந்த
குற்றத்திற்காக குமாருக்கு கிடைத்தது சிறைத்தண்டனை அல்ல, மரணதண்டனை.
தன் தாய்க்கு நல்ல மகனாய்
கனவில் மட்டுமே வாழ முடிந்ததை எண்ணி வெறித்து போய் அமர்ந்திருந்தான். கனவில் நடந்ததை
போல இரண்டாம் வாய்ப்பு தனக்கும் கிடைதிருந்தால் வாழ்ந்திருக்கேலாமே என்றெண்ணி கலங்கினான்.
“சார், எனக்கு ஒரு உதவி
செய்ய முடியுமா?”
தூக்கு மேடைக்கு போக சில
மணி நேரத்துக்கு முன்பு உதவியென்று கேட்கும் குமாரை கணபதி பாவமாய் பார்த்தார்.
“அப்பறமா அம்மா தான்
வருவாங்கன்னு நினைக்கிறேன். அவுங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்றிங்களா.”
மரணத்தின் தருவாயில்
நின்றுகொண்டு மன்னிப்பு கேட்கும் குமாரின் நிலைபார்த்து கணபதி சற்று தடுமாறி
போனார். சரியென்று தலையசைத்த அவரிடம் குமார் அம்மா தன்னை மன்னிப்பாங்கலான்னு
கேட்டான். கணபதி குமாருக்கு ஆறுதலாய் சில வார்த்தைகள் சொன்னார்.
“அம்மாதானடா.
மன்னிச்சிருவாங்க.”
No comments:
Post a Comment