உறக்கம் இல்லா இரவுகள்
இறக்கம் இல்லா நினைவுகள்
விழிப்பில் கூட கனவுகள்
விடையே இல்லா கேள்விகள்
வலிகள் நிறைந்த நேற்றுகள்
வழியே தெரியா நாளைகள்
எதுவும் இல்லா எதிர்காலம்
நீயும் இல்லா நிகழ்காலம்
போதும் இந்த கோடைகாலம்
நீ வந்தால் வரும் வசந்தகாலம்
வாடி ராசாத்தி
வாழ்ந்துதான் பார்ப்போமே...
வல்லாவிடம் இருந்து கடைசியாய் வந்த கவிதை இது. கடந்த ஒரு வாரமாய் கவிதைகள்
எதுவும் வரவில்லை. திடிரென்று என் மின்னஞ்சலில் அவன் குவித்த இந்த கவிதைகளுக்கு காரணம்
தெரியவில்லை. இப்போது சில நாட்களாய் கவிதை வராமல் போன காரணமும் புரியவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு மித்ரா என்னை தொடர்பு கொண்டாள். வல்லா அவளை
சந்திக்க வேண்டுமென்றும் என்னைப் பற்றி பேசவேண்டுமென்றும் சொன்னதாக சொன்னாள்.
இன்று அவர்கள் சந்தித்திருக்க வேண்டும்.
எங்கள் பிரிவிற்கு பிறகு நான் எல்லோரிடமும் இருந்து விலகிக்கொண்டேன். சில
ஆண்டுகளுக்கு முன்பு முதுகலை பட்டம் படிக்கின்ற போதுதான் நான் மித்ராவை தொடர்பு
கொண்டேன். வல்லாவைப் பற்றியும் அவ்வப்போது மித்ராவிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். என்னை
பற்றிய தகவலை யாரிடமும் சொல்லிவிட வேண்டாமென்று அவளிடம் கேட்டுக்கொண்டேன்.
தொலைந்து போன நான் தொலைந்து போனவளாகவே இருந்திட விரும்பினேன்.
இரண்டு நாட்களாய் நானும் நிம்மதியற்று கிடக்கிறேன். மித்ரா கண்டிப்பாக
என்னைப்பற்றி வல்லாவிடம் சொல்ல மாட்டாள். அவளுக்கே என் நிகழ்கால வாழ்க்கை பற்றி
எதுவும் தெரியாது. என்னை போட்டு புரட்டி எடுப்பதெல்லாம் வல்லாவின் இந்த கவிதைகளும்
அவன் திடிரென்று என்னை பற்றி பேச வேண்டுமென்று சொன்னதும் தான். பொறுமையிழந்து மித்ராவை
தொடர்பு கொண்டேன்.
“மித்ரா, அவர் கிளம்பிட்டாரா?”
“இப்போதான் கிளம்பினாரு. சொல்லி வச்சா மாறியே அழைக்குற?”
நல்லவேளை வல்லா அங்கே இல்லை. ஆனால் சில நொடிகளுக்கு முன் அங்கே
இருந்திருக்கிறான். அவன் வாசமோ சுவாசமோ காற்றலைகள் வழியாக வந்து என் கன்னம்
வருடுவதாய் உணர்கிறேன். பழைய காயங்கள் மீண்டும் வலிக்கத் தொடங்கியது.
பத்தாண்டுகளாய் காணாத முகம். கடைசியாய் கண்ணீரோடு விடைபெற்ற முகம். எப்படி
இருக்கிறான் அவன்? சவரம் செய்யாத முகம், கறுப்புச் சட்டை, கடிகாரம் கட்டாத கரம்,
ஆள்காட்டி விரலில் மோதிரம். அத்தனையும் இருக்கிறதா? அந்த நொடியில் மித்ராவின்
விழிகள் கண்ட அவனுருவத்தை காண துடித்தாலும் கேட்க தயங்கினேன்.
“எப்படி இருக்காரு?”
இப்போதைக்கு என்னால் கேட்க முடிந்த ஒரே கேள்வி இதுதான். நான் அவனைப் பற்றி
கேட்கும்போதெல்லாம் மித்ரா சொல்லும் ஒரே பதில் நல்லா இருக்காரு என்பதுதான். ஆனால்
இந்த முறை பதில் மாறுபட்டு இருந்தது.
“தெரியல கயல். கண்ணுல சந்தோசம் இல்ல. அவர் மீண்டும் உன்ன தேடுறாரு.”
மித்ராவின் பதில் நான் எதிர்பார்த்த ஒன்றுதான். வாடி ராசாத்தி என்று அவன்
கவிதையில் சொல்வதன் அர்த்தம் கூடவா எனக்கு புரியாமல் போகும்? வல்லா எங்கள்
நண்பர்களிடம் என்னை பற்றி விசாரிக்க சொல்லியிருக்கிறான். மேலும் பல இடங்களில்
என்னை தேடியிருக்கிறான். காரணம் கேட்க வேண்டாமென்று அவன் சொன்னதையும் மித்ரா
சொன்னாள். நல்லவேளை என் வார்த்தைக்கு மதிப்பளித்து மித்ரா என்னைப்பற்றி அவனிடம்
எதுவும் சொல்லவில்லை.
“மித்ரா, என்னை பற்றி எதுவும் சொல்லிக்காத. கொஞ்ச நாள் தேடி பார்த்துட்டு அவரே
விட்டுருவாரு.”
நான் பேசி முடிக்கும் முன்னரே மித்ரா குறுக்கிட்டாள்.
“கயல், நீ தெரிஞ்சி தான் பேசறியா? பத்து வருஷமா உன்ன மறக்காம வாழ்ந்தவர் பத்து
நாள் தேடி பார்த்துட்டு விட்டுருவாரா?”
மித்ராவின் குரலில் கோபம் தெரிந்தது. அவள் சொல்வது உண்மைதான். அது எனக்கும்
தெரியும். இருக்கும் இடம் கூட தெரியாமல் நான் விலகிப்போனாது அவன் என்னை மறக்க
வேண்டுமென்றுதான். ஆனால் அவன் மாறவும் இல்லை, மறக்கவும் இல்லை.
ஒரு பக்கம் மனசு அவனை நினைத்து கலங்க மறுபக்கம் மித்ராவுடனான உரையாடல்
தொடர்ந்தது. மித்ரா பொதுவாக வல்லாவை பற்றி அதிகம் என்னிடம் பேசுவதில்லை. ஆனால்
இன்று அவனுக்காக பேசினாள்.
“கயல், நீ இன்னமும் ஏன் அவரை விட்டு விலகி போறேன்னு எனக்கு தெரியல. இது ரெண்டு
பேர் வாழ்க்கை. யோசிச்சி பாரு. பிறகு அழைக்குறேன்.”
என் பதிலுக்கு காத்திராமல் மித்ரா அழைப்பை துண்டித்தாள். அவள் பேச்சில் இருந்த
கோபம் அவன் கண்களில் அவள் கண்ட காயத்தின் அளவைச் சொல்லியது. மித்ராவை நான்
மீண்டும் சந்தித்து பேசியபோதே வல்லாவைப் பற்றி அறிந்துகொண்டேன். ஆனால் அவனைத்
தேடிச்செல்லும் நிலையில் அப்போதும் இப்போதும் நான் இல்லை.
மித்ரா சொன்னதைப்போல இது இரண்டு பேர் வாழ்க்கையல்ல. மூன்று பேர் வாழ்க்கை.
“அம்மா.”
ஒரு மழலை குரல் என்னை அழைத்தது. இசைப்பிரியா, என் ஆறு வயது மகள் என்னை
அழைத்தபடி ஓடி வந்தாள்.
“அம்மா, மல்லிகா பாட்டி உங்கள கூப்பிடறாங்க. நாளைக்கு கேம்பிங் போக ரெடி
பண்ணனுமாம்.”
சொல்லி முடித்து மீண்டும் விளையாட ஓடிப்போனாள் பிரியா. மூன்று பேர்
வாழ்க்கையென்று நான் சொன்னது என் மகளையும் சேர்த்துதான். இப்போது என் வாழ்வில்
எனக்காக இருப்பது அவள் மட்டும்தான். எங்கள் இருவரின் வாழ்வையும் பூர்த்தி செய்வது
எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் இந்த சிறார் இல்லம். இப்போது கூட நாளை
இந்த இல்லத்தில் நடக்க இருக்கும் ஒரு முகாமிற்கு உதவி செய்யத்தான் நான் அவளோடு
இங்கு வந்துள்ளேன்.
இனி என் வாழ்க்கை பிரியாவுக்காகவும் இந்த குழந்தைகளுக்காகவும்தான்.
வல்லாவுக்கு என் நிகழ்காலம் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பத்தாண்டுகளுக்கு
முன்பு என்னோடு வாழ போராடி தோற்றவன், இத்தனை ஆண்டுகளாய் என் நினைவோடு வாழ்வை
கடந்தவன், இன்று ஏனோ மீண்டும் என்னைத் தேடி தவிக்கிறான்.
“வேலையா இருக்கியாமா? நாளைக்கு கேம்பிங் ஏற்பாடுகள் பற்றி பேசிரலாமா?”
மல்லிகா அண்டி என்னை தேடியே வந்துவிட்டார். அவர் என்னை அழைத்ததையே
மறந்துவிட்டேன். ஆண்டுக்கொருமுறை பள்ளி விடுமுறையில் இந்த சிறார் இல்லத்தின்
ஏற்பாட்டில் கல்வி முகாம் ஒன்றை நடத்துவார்கள். இந்த முறை நான் பணியாற்றும்
பள்ளியிலேயே மூன்று நாட்கள் தங்கி இந்த முகாமை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
மனக்கவலைகளை மூட்டை கட்டிவிட்டு வேலைகளை பார்க்கத் தொடங்கினேன். பிரியா முதல்
முறையாய் இந்த முகாமில் கலந்து கொள்வதால் அவள் மிகவும் ஆர்வமாக இருந்தாள். அம்மா
அம்மாவென்று என்னை சுற்றி ஓடிவரும் என் மழலையின் குரலில் தொலைந்தே போனது சற்றுமுன்பு
என்னை வாட்டி வதைத்த வல்லாவின் கவிதைகளும் பழைய நினைவுகளும்.
ஏற்பாட்டு வேலைகளை செய்து முடிக்கவே வெகு நேரமாகிவிட்டது. மறுநாள் எல்லோரும்
பள்ளியை சென்றடைந்து முகாமின் பதிவை முடிப்பதற்குள் மதியம் ஆகிவிட்டது. மதிய உணவு
வேளையில் அவசரமாக ஆசிரியர் அறைக்கு போனேன்.
நான் அவசரமாய் ஓடி வந்தது என் மின்னஞ்சலை பார்க்கத்தான். மீண்டும் கவிதை
எதுவும் வராதா என்ற எதிர்பார்ப்பு என்னுள் ஏதோ ஒரு மூலையில் இருக்கத்தான் செய்தது.
இன்றும் கவிதை எதுவும் வரவில்லை. பதில்வராத முகவரிக்கு அவனும் எத்தனை
கவிதைகள்தான் அனுப்பி வைப்பான்.
அவனிடம் இருந்து மின்னஞ்சல் வராதது ஏமாற்றத்தை தந்தாலும் அதுவும்
நன்மைக்கென்று ஆறுதல் கொண்டேன். பத்தாண்டுகள் கழித்து ஏதோ ஒரு காரணத்திற்க்காக
என்னை தேட தொடங்கியவன், நான் கிடைக்கவே மாட்டேன் என்ற நிலைக்கு தள்ளப்பட்டால்
கட்டாயம் என்னை மறக்கத் தொடங்குவான். அவன் என்னை மறக்கின்ற நொடியில் மீண்டும்
காதல் கொள்வான்.
“வல்லா, நீ அடிக்கடி சொல்லுவியே, உனக்கு இன்னொரு தாயா, முதல் மகளா, கடைசி
காதலா நான் இருக்கணும்னு. அப்படி ஒரு பொண்ண நீ பார்க்கணும்.”
என் புத்திக்கு வந்த பக்குவம் இன்னும் மனசுக்கு வரவில்லை.அதனால் தான் என்னவோ
மீண்டும் மீண்டும் அவன் கவிதைகளை எதிர்பார்க்கிறது.. அப்போது மல்லிகா அண்டி
என்னைத் தேடி ஆசிரியர் அறைக்குள் வந்தார்.
“என்னம்மா, கவிதை படிக்க வந்துட்டியா?”
மல்லிகா அண்டிக்கு என் வாழ்வில் நடந்த எல்லாம் தெரியும். என் தாயின் மறைவுக்கு
பிறகு என்னை தாய்போல பார்த்துக்கொண்டது அவர் தான்.
“இன்னைக்கும் கவிதை வரல அண்டி. இனிமேல் வராது போல. நல்லதுதானே?”
மல்லிகா அண்டி எத்தனையோ முறை வல்லாவை சந்திக்க சொன்னதுண்டு. அவன் என்னை
தேடுகிறான் என்ற தகவலை சொன்னபோது, அவனை சந்திக்க சொல்லி என்னை வற்புறுத்தவும்
செய்தார். நான் பிடிவாதமாய் இருப்பது அவருக்கு இன்னமும் என் மேல் கோபம்தான்.
“யோசிச்சி தான் பேசறிங்களா அண்டி? நான் ஒரு குழந்தைக்கு அம்மா. என்னால இனிமேல்
கல்யாணத்தை பற்றி எல்லாம் யோசிக்க முடியாது.”
நான் சொன்ன வார்த்தைகள் அவர் கோபத்தை மேலும் அதிகரித்தது.
“பைத்தியம் மாறி பேசாத கயல். உனக்கு இன்னும் கல்யாணமே ஆகல.”
பிரியா என் வளர்ப்பு மகள். ஆறு
மாட குழந்தையாக இருக்கும் போது பிரியா இங்கே சேர்க்கப்பட்டாள். உறவே இல்லாமல் போன
என் வாழ்வை பூர்த்தி செய்ய வந்தவளாகத்தான் அவளைப் பார்த்தேன். இங்க்குள்ள எல்லா
பிள்ளைகளையும் நான் உறவாய் நினைத்து பார்த்தாலும் பிரியா மட்டும் எனக்கு உயிராக
இருந்தாள். அவளை தத்தெடுக்கும் விருப்பத்தை மல்லிகா அண்டியிடம் சொன்னபோது அவர்
எவ்வளவோ மறுத்தார். பிடிவாதமாய் இருந்து அவர் சம்மதத்தை பெற்று பிரியாவை
தத்தெடுத்தேன்.
“வேண்டாம் அண்டி. எனக்கும் பிரியாவுக்கும் இடையே ஒரு உறவு வருவது அவளை ரொம்ப
பாதிக்கும். நாங்க இப்படியே இருந்திடறோம்.”
அப்போது என் பள்ளியின்
பாதுகாவலர் என்னைத் தேடி ஆசிரியர் அறைக்குள் வந்தார்.
“டீச்சர், உங்கள தேடி வல்லானு
ஒருத்தர் வந்திருக்காரு.”
No comments:
Post a Comment