Pages

Saturday, August 24, 2013

பிழைக்க வந்தவர்கள் அல்ல...

செம்மண் சாலையிலும் செம்பனை தோட்டத்திலும்...
வாழ்ந்து மடிந்த
என் பாட்டனின் வாழ்க்கை...
இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

உழைத்து உழைத்து சருகாய் விழுந்த...
அவன் சரித்திரம் பாவம்...
மலைநாட்டின் வரலாற்றில் எழுதப்படாமல் போனது...

இந்த மண்ணை வளமாக்க...
அவன் வியர்வை துளியும் விழுந்த கதை...
பாடப்புத்தகத்தில் இடம்பெறாமல் போனது...

வரலாறு தெரியாத முட்டாள் கூட்டமொன்று...
உழைக்க வந்த எங்களை இன்னமும்...
பிழைக்க வந்த கூட்டமென்று..
இழிவாய் சொல்லி சிரிக்கிறது...

இவர்களுக்கு எப்படி சொல்லி புரியவைப்பேன்....
நாங்கள் பிழைக்க வந்தவர்கள் அல்ல...
பிழைக்க தெரியாதவர்கள் என்று...




Wednesday, July 31, 2013

பெயர்..

கட்டங்கள் பார்த்து...
கால நேரமெல்லாம் கணித்து...
தமிழகராதியில் இல்லாத பெயரொன்றை கண்டெடுத்து....
பாவம் அந்த பெயரையும்..
கூட்டு எண் சரி பார்த்து..
எழுத்துப்பிழையோடு எழுதி முடித்து...
பெயர்சூட்டு விழாவும் நடத்துகிறார்கள்....

கூப்பிட வைத்த பெயர்...
கூட்டு எண் செய்த சதியால்...
வாயில் நுழையவே திண்டாடுது...

Friday, June 28, 2013

எஸ்டேட்டு காதல்....

எஸ்டேட்டில் பொறந்தபுள்ள..
ஏழையா வளர்ந்தபுள்ள...
கித்தா தோப்பில் வேலைசெஞ்சே...
பாதிவாழ்க்க முடிஞ்சிருச்சி...

கால்வயிறு சோத்துக்கே...
கஷ்டப்பட்டு வாழுற நான்...
கொசுக்கடியில் படுத்துறங்கி...
காதல் கனவு காணலாமா?

மேனேஜர் மகனே...
மேல்படிப்பு படிச்சவனே....
மனசார உன்ன நெனச்சி...
மௌனத்தில் சாகிறேனே...

ஒன்னாம்ப்பு படிக்கும் போது..
உன்னோட படிச்சவ நான்..
நீ மறந்து போயிருப்ப..
என்னால முடியாதடா....

உன்ன வாடா போடான்னு...
கூப்பிட்ட காலமெல்லாம்...
அந்த ஒன்னாம்ப்பு காலத்தோட...
முடிஞ்சிபோச்சி படிச்சவனே...

வெள்ளைக்கார பையன்போல...
இங்கிலீசு பேசுறியே...
என் பேச்சி எல்லாமே...
எஸ்டேட்டு பாஷைதாண்டா...

பேசுற பேச்சில்கூட...
எத்தனையோ வேறுபாடு...
நீயும் நானும் எப்படித்தான் சேருவது...

எனக்காக எவனையாச்சும்...
என் அப்பன் பார்த்து வைப்பான்...
உனக்கான தேவதைய...
நீயே பார்த்திருப்ப...

சொல்லாமல் செத்துப்போன...
பலகோடி காதலோட..
என் காதலும் சாகட்டும்...
நீ வாழ்ந்தால் அது போதும்....

Sunday, June 23, 2013

கல்லூரி நினைவுகள்...

விடைபெறுவோம் தோழியே....
இருவேறு திசையில் இருவரும் 
போகும் நேரம் இது....

எதிர்பார்த்த பிரிவென்பதால்
இருவருக்கும் வருத்தமில்லை....
இருந்தாலும் ஏக்கத்தோடு திரும்பி பார்க்கிறோம்....
இறந்த கால நினைவுகளை...

மீண்டும் சந்திப்பதாய் சத்தியம் செய்து
பிரிந்த நண்பர் கூட்டம்....
சிந்திக்கவும் நேரமின்றி சிதறி கிடைப்பதைப்
பார்த்தப்பின்பும்....
இருவரும் சொல்லிப்பிரிகிறோம்....
மீண்டும் சந்திப்போமென்று ...

அந்த அடுத்தச் சந்திப்பு
எப்படியோ நிகழ்ந்து போனாலும்
அடையாளம் தொலைந்தவனாய்...
என்னை காணும் நிலை உனக்கும் வரலாம் .....

காலத்தின் சவுக்கடியில் 
தொலைந்து போன என்னை
அப்போது அடையாளம் காட்ட
எப்போதும் தொலைக்காமல் வைத்திருப்பாயா .........
இந்தக் கல்லூரி நினைவுகளை..??

Thursday, May 16, 2013

வாழ்க்கை.....

என் வழியில் பள்ளங்கள் இருக்குமென்று
நீ எச்சரிக்கவில்லை...
நான் தடுக்கி விழும்போது நீ தாங்கி பிடிக்கவில்லை....
நான் வலியில் துடித்தபோது நீ துணையிருக்கவுமில்லை...
நான் எழுந்து நின்றுவிட நீ கைகொடுக்கவுமில்லை...

நானே தட்டு தடுமாறி எழுந்து நின்றேன்...
என்னை தட்டி கொடுத்து உன் பக்தன் சொன்னான்...
நான் விழுந்ததும் எழுந்ததும் உன் சோதனையாம்...
அந்த அனுபவம்தான் உன் போதனையாம்...




...................................................



Wednesday, April 3, 2013

தேர்தல் அழைப்பு...

புதிய ஆட்சியென்று ஒரு கூட்டம் அழைத்தது...
மறுமலர்ச்சி என்று ஒரு கூட்டம் அழைத்தது...
இனத்தின் நலனுக்காக ஒரு கூட்டம் அழைத்தது...
இனிமேல் நல்லாட்சியென்று ஒரு கூட்டம் அழைத்தது...

அவன் எதற்கும் அசைவதாய் தெரியவில்லை...
ஓட்டு சாவடி பக்கம் அவன் நிழல்கூட பதியவில்லை...
சலித்து போன கூட்டம் அவனை பழித்து சென்றது...

பாவம் அவர்கள் யாருக்குமே தெரியாது...
அந்த பாமரனுக்கு பிறப்பு பத்திரமே கிடையாதென்று...